அணிலுக்கு முதல்வர் தொகுதினு தெரியாம போச்சே.. தூங்கவிடாம இப்படியா செய்றது? மின்வெட்டால் சசிகலா தாக்கு
சென்னை : வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், திமுக அரசோ தன் பங்குக்கு அறிவிக்கப்படாத மின்வெட்டை ஏற்படுத்தி, மக்களை இரவில் தூங்கவிடாமல் துன்புறுத்துகிறது என சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதாக கடந்த ஒரு வார காலமாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக திருவல்லிக்கேணி, பெரம்பூர், ஈக்காட்டுத்தாங்கல், திருவொற்றியூர், கொளத்தூர், போரூர் உட்பட சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், இது குறித்து புகார் அளிக்க போன் செய்தால் அதிகாரிகள் எடுப்பதில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். திடீர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு சென்னையில் மின்வெட்டை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருவது பெரும் வேதனை அளிக்கிறது. மின்தடை ஏற்படாமல் இருப்பதற்கு எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், மக்கள் படும் சிரமத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். நேற்று சென்னையில் 107 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திமுக தலைமையிலான அரசோ தன் பங்குக்கு மின் வெட்டு செய்து மக்களை இரவில் தூங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறது.
கடந்த ஆண்டும் இதேபோன்று பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது மின்சாரத்துறை அமைச்சரோ மின்வெட்டுக்கு அணில் தான் காரணம் என்று ஒரு வாயில்லாத ஜீவன் மீது குற்றம் சுமத்தினார். இந்த வருடம் என்ன காரணம் சொல்லலாம் என்ற தீவிர ஆலோசனையில் மின்சார வாரியம் இருப்பதாக தெரிய வருகிறது. மேலும், மின் வெட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான அணில்கள் நேற்றைக்கு தமிழக முதல்வர் தொகுதி என்பது தெரியாமல் அதன் வேலையை காண்பித்து இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நேற்று கொளத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு, இரவு முழுவதும் மின்சாரம் இன்றி பொதுமக்கள் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கம் இல்லாமல் தவித்துள்ளனர். குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
திமுக தலைமையிலான அரசு ஏழை எளிய சாமானிய மக்களின் துன்பத்தை போக்கும் வகையில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். திமுகவிற்கு வாக்களித்த குற்றத்திற்காக மின்சாரமின்றி இரவில் தூங்கமுடியாமல் தவிக்கும் சாமானிய மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு உடனே மின் தட்டுப்பாட்டை சீர் செய்ய வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
திமுக தலைமையிலான அரசு இரண்டு வருடம் தூங்கியது போதும், இனிமேலாவது தூக்கத்திலிருந்து கண்விழித்து, மக்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்." என சசிகலா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications