Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

24 ஆம் தேதி புதுக் கட்சி தொடங்கும் சசிகலா? பசும்பொன்னில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள்.. அதிரும் சவுத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், சசிகலா புது கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. வருகிற 24 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் சசிகலா பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று தனிக்கட்சி தொடங்குவதற்கு சசிகலா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தனது ஆதரவாளர்களுடன் சசிகலா தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சசிகலாவின் நிலைப்பாடு என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில், அமமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்து வந்துள்ள ஆதரவாளர்கள் சசிகலாவை சந்தித்தனர்.

Sasikala

சென்னை போயஸ் கார்டனில் சசிகலாவை சந்திக்க வந்த அவரது ஆதரவாளர்களுக்கு படிவம் ஒன்று வழங்கப்பட்டது. அதில் ஆதரவாளர் பெயர், அவர்களது விவரம் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சியில் வகித்த பதவிகளின் பொறுப்புகள் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தது. சசிகலா தனது ஆதரவாளர்களின் கருத்துகளை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, அதன் பிறகு நடந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதலமைச்சராக அவர் பதவி ஏற்க இருந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது.

அதில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா உடனடியாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைக்குச் செல்லும் முன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்து விட்டு சென்றார். அதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். ஓ.பன்னீர்செல்வத்தையும் தன்னோடு இணைத்துக்கொண்டு அவரை துணை முதலமைச்சர் ஆக்கினார்.

சசிகலா 4 ஆண்டு சிறை வாசத்தை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அரசியல் நிலைமையே தலைகீழாக மாறிப்போய் இருந்தது. அதிமுகவில் மீண்டும் அவரால் கோலோச்ச முடியவில்லை. அரசியலை விட்டு ஒதுங்கிய அவர், தனது ஆதரவாளர்களை மட்டும் அவ்வப்போது சந்தித்து பேசி வந்தார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சசிகலா கூறிவந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து எடப்பாடி பழனிசாமியோடு கைகோர்த்து விட்டார். இதனால் தனிக்கட்சி தொடங்கும் முடிவிற்கு சசிகலா வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவில் இருந்த முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில், அறிஞர் அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சசிகலா, "தேர்தல் களத்தில் இறங்குவேன்" என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24 ஆம் தேதி புதிய கட்சி தொடங்க சசிகலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் பிரமாண்ட மாநாட்டினை நடத்தி, தனது அரசியல் பிரவேசத்தை அவர் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காலை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று காலை பசும்பொன்னில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நடைபெற உள்ள இந்த பொதுக்கூட்டத்தில் சசிகலா தனது புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயரை சசிகலா அறிவித்து, கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளார் எனக் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் தன்னை மீண்டும் நிலை நிறுத்த சசிகலா தனிக்கட்சி தொடங்க எடுத்து வரும் முயற்சிகளால் அரசியல் களம் மேலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தனது சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அரசியல் கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க சசிகலா முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+