சசிகலா - டிடிவி தினகரன் பனிப்போர் உச்சகட்டம்? சந்தித்த பெண் நிர்வாகிக்கு கட்டிய கட்டம்!
சென்னை: சசிகலாவை சந்தித்த அமமுக நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை அண்மையில் கட்சியை விட்டு நீக்கினார் டிடிவி தினகரன். சசிகலாவை சந்தித்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகியை நீக்கும் அளவுக்கு சசிகலா - தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளது. அமமுக நிர்வாகிகளின் மனமாற்றத்துக்கு பின்னணியில் சீட் கணக்குகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமியை மிக தீவிரமாக எதிர்த்து வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்து விட்டார். தீவிர அரசியலில் சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா, தற்போது அதிமுக - பாஜக கூட்டணிக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகலா திட்டம்
ஓ.பன்னீர்செல்வம் தற்போது தனித்து விடப்பட்டுள்ள நிலையில், அவரும் சசிகலாவுடன் சேர இருப்பதாக கூறப்படுவதால், தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், சசிகலா என்ன முடிவெடுப்பார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், அமமுக மாணவியர் அணி மாநில செயலாளராக இருந்த ஜீவிதா நாச்சியார் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் பலர் அண்மையில் சசிகலாவை சந்தித்தனர். இதனால் அதிருப்தியடைந்த டிடிவி தினகரன், தன்னை கேட்காமல் சசிகலாவை சந்தித்த ஜீவிதா நாச்சியாரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
திருமங்கலம் - ஜீவிதா
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஜீவிதா நாச்சியாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று முன்பு உறுதி கொடுத்திருக்கிறார் டிடிவி தினகரன். அதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஜீவிதா நாச்சியாரும் அங்கு தீவிரமாக பணியாற்றி வந்துள்ளார்.
இப்போது அதிமுக உடன் தினகரன் கூட்டணி அமைத்திருப்பதால், திருமங்கலம் தொகுதி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு தான் கிடைக்கும். தனக்கு திருமங்கலம் தொகுதி கிடைக்காது என்ற அதிருப்தியில் தான் ஜீவிதா நாச்சியார் சசிகலாவை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
தினகரன் அதிரடி ஆக்ஷன்
சசிகலா, வரும் சட்டசபை தேர்தலில் தனது ஆதரவாளர்களை பல்வேறு தொகுதிகளிலும் களமிறக்க திட்டமிட்டு வருவதால், சசிகலாவுடன் இணைந்து திருமங்கலம் தொகுதியில் போட்டியிட ஜீவிதா நாச்சியார் விரும்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
அமமுக, அதிமுக பாஜக கூட்டணியில் சேர்ந்ததும், கோவில்பட்டியில் போட்டியிட தயாராகி வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த மாணிக்கம் ராஜா திடீரென திமுகவில் சேர்ந்தார். கோவில்பட்டி தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என உறுதியாக எதிர்பார்த்து இருந்த மாணிக்கராஜா அதிமுக உடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைந்ததால் இனி கோவில்பட்டி தொகுதி கடம்பூர் ராஜுவுக்கு தான் கிடைக்கும் என்பதை அறிந்தே திமுகவில் இணைந்துள்ளாராம்.
அமமுகவில் அப்செட்
அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிப் பட்டியல் வந்தவுடன் அதில் தங்கள் தொகுதி இல்லை என்றால், இதுபோல் இன்னும் சிலர் விலகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்காக தீவிரமாக கட்சி பணியாற்றி வந்த பலர் அதிமுக உடனான கூட்டணியால் தமக்கு சீட் கிடைக்காது என அப்செட் ஆகியுள்ளனராம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உடன் டிடிவி தினகரன் கூட்டணி அமைத்துள்ளதால் சசிகலா - தினகரன் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. சசிகலா - டி.டி.வி.தினகரன் மோதலால் சமூக வலைதளங்களிலும் அமமுகவை சேர்ந்தவர்களே இரு பிரிவாக மோதிக் கொண்டு வருகின்றனர். இது தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்ட முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications