எடப்பாடி பழனிச்சாமியை கூல் செய்த ஓபிஎஸ்.. இரு ஏமாற்றங்களை சந்தித்த சசிகலா?.. என்னென்னு பாருங்க!
சென்னை: அதிமுக இனி தன் தலைமையில் இயங்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு தொடர்ந்து ஏமாற்றமே விஞ்சியுள்ளது.
Recommended Video
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது அவராகவே அதிமுகவின் இரட்டை தலைமையை சந்தித்து ஏதேனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இல்லாவிட்டால் நிலுவையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் வழக்கை கையில் எடுத்து இரட்டை தலைமைக்கு ஆட்டம் காண்பிப்பார் என கருதப்பட்டது. அதையும் அவர் செய்யவில்லை. மாறாக அதிமுக, அமமுக தொண்டர்களுடன் சசிகலா பேசியதாக ஆடியோ "லீக்கானது".

சசிகலா
இதுவரை சசிகலா நேரடியாக தன்னை அதிமுகவில் இணைத்து கொள்ளுமாறும் கேட்டதில்லை. மதுரையில் கடந்த ஆண்டு நடந்த தேவர் ஜெயந்தியிலும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பீர்களா என ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தலைமை கழக நிர்வாகிகள்தான் இதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அதிமுகவில் சசிகலாவுக்கு நோ
இந்த நிகழ்வுக்கு முன்பு சசிகலாவை அதிமுகவில் இணைக்கவே மாட்டோம் என ஓபிஎஸ் கூறிவந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் அவர் கூறியது சசிகலாவுக்கு சாதகமான பதிலாகவே பார்க்கப்பட்டது. இதைவைத்துக் கொண்டு சசிகலா ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

வளர்ச்சி இல்லை
அதையும் அவர் செய்யவில்லை. சட்டசபை தேர்தலுக்கு பிறகு நகர்ப்புற தேர்தலுக்காக காத்திருந்தார். அதிலும் அதிமுக எந்த வித வளர்ச்சியைபெறவில்லை. இதனால் சசிகலாவுக்கு ஆதரவாக எங்கோ ஒரு மூலையில் கட்சியினர் போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து ஆங்காங்கே சசிகலா தலைமை வேண்டும் என்ற குரல் வலுத்தது.

தேனி மாவட்ட அதிமுக தீர்மானம்
இது தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றி ஓபிஎஸ்ஸிடமே ஒப்படைக்கும் அளவுக்கு வீரியம் கொண்டதானது. இதையடுத்து புது நம்பிக்கையுடன் ஆன்மீகப் பயணம் என்ற பெயரில் சசிகலா தென் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டார். நிச்சயம் தென் மாவட்டங்களுக்கு செல்லும் போது ஓபிஎஸ் தன்னை வந்து சந்திப்பார் என சசிகலா எதிர்பார்த்தார்.

ஓ ராஜா சந்திப்பு
ஆனால் அவர் வரவில்லை. அவரது சகோதரர் ஓ ராஜா போய் சசிகலாவை திருச்செந்தூரில் சந்தித்தார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். தென் மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நிர்வாகிகள் என ஒரு படையே திரண்டு வந்து தம்மை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்தார்.

அதிமுகவிலிருந்து ஓ ராஜா நீக்கம்
ஆனால் ஓ ராஜாவையே கட்சியிலிருந்து நீக்கியதால் சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்தவர்கள் ஒன் ஸ்டெப் பேக் அடித்தனர். எனவே இந்த ஆன்மிக பயணமோ அரசியல் பயணமோ சசிகலாவுக்கு கை கொடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியில் இருந்த அவர் விமான பயணத்தை தவிர்த்துவிட்டு காரில் பயணம் மேற்கொண்டார். அதுவும் ஏமாற்றத்திலேயே முடிந்துவிட்டது.

எடப்பாடி பழனிச்சாமி
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், சசிகலாவின் ஆதரவாளர் என கருதப்பட்டு வந்தது. அதிமுகவில் சசிகலாவை இணைக்க தமக்கு எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மட்டுமே எதிராக இருப்பர் என்றும் சசிகலா கருதி வந்தார். ஆனால் நேற்று இரவு மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

சசிகலா குறித்த கேள்வி
அப்போது அவரிடம் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக் கொள்வீர்களா என கேட்டதற்கு அய்யோ சாமி, வாங்க சாமி என சிரித்துக் கொண்டே மதுரை விமான நிலையத்திற்குள் சென்றார். இதனால் சசிகலா மிகவும் அப்செட்டாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவை எப்படியாவது கைப்பற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு தென் மாவட்ட சுற்றுப்பயணமும் ஓபிஎஸ்ஸின் அந்தர் பல்டி பதிலும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

ஓபிஎஸ் பதில் ஏன்
கடந்த முறை மதுரையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பதிலை கூறிவிட்டு அதற்கான எதிர்வினைகளால் ஓபிஎஸ் பெரிதும் அவதிப்பட்டார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தன்னை விட்டுவிட்டு இபிஎஸ் தனியே போய் சந்தித்தது, ஜெயக்குமாருக்காக தன்னைவிட்டுவிட்டு இபிஎஸ் தனியே நடத்திய ஆர்ப்பாட்டம், தேனி மாவட்ட அதிமுகவினர் தீர்மானத்தையொட்டி சேலத்தில் இபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டம் ஆகியவற்றை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு இனியும் எடப்பாடி பழனிச்சாமியை பகைத்துக் கொள்ள கூடாது என்பதால் ஓபிஎஸ் இதுபோல் பதில் அளித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த பதிலின் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் ஒரு வித நம்பிக்கையையும் தந்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications