பெருங்களத்தூர் பக்கத்துல பாருங்க.. வெளியான சேட்டிலைட் இமேஜ்.. தாம்பரத்திற்கு பெரிய குட்நியூஸ்
சென்னை: சென்னை மாநகரின் நுழைவாயிலான பெருங்களத்தூரில் தாம்பரம் டூ வண்டலூர் மார்க்கமாக ரெடியாகும் பாலம் விரைவில் முடிந்து திறக்கப்படும் என தெரிகிறது. அந்த பகுதியில் நடக்கும் மேம்பாலம் பணிகள் தொடர்பாக செயற்கைகோள் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
சென்னையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர், அனைத்து அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இங்கிருந்தான் பயணிகளை ஏற்றி செல்கின்றன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் சென்னைக்குள் குறையவே இல்லை.. அதேநேரம் பெருங்களத்தூர் பகுதியில் முன்பு போல் மோசமான போக்குவரத்து இல்லை..

முன்பு கோயம்பேட்டில் இருந்து வரும் பேருந்துகள் எல்லாமே பெருங்களத்தூரில் தான் நேரடியாக வரும். தாம்பரம் வழியாக வராமல் நேரடியாக வானகரம் போரூர் பைப்பாஸில் பெருங்களத்தூரில் அனைத்து பேருந்துகளும் வரும் போது, அந்த பகுதியே திண்டாடிப்போகும். பெருங்களத்தூரில் உள்ளவர்களால் இந்த பக்கம் போகவே முடியாது. குறிப்பாக ரயில்வே கேட்டை கடப்பது என்பது அசாதாரணமான ஒன்றாக இருந்தது. சென்னை மக்களை பொறுத்தவரை பெருங்களத்தூரை எப்போது தாண்டுவோம் என்று ஏங்கும் நிலை இருந்தது. எறும்புகள் போல் ஊர்ந்து செல்லும் நிலை பல காலம் நீடித்தது.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பிய தமிழக அரசு, பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க மூன்று மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டது. இதற்காக கடந்த 2020ல் 234 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததுடன் மேம்பாலங்கள் கட்டும் பணியை ஆரம்பித்தது.

பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் இருந்து ரயில்வே கிராசிங் மேம்பாலம் மற்றும் பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் மற்றும் நெடுங்குன்றம் மார்க்கமாகச் செல்லும் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. கொரோனா காரணமாக பணிகள் தாமதம் ஆன நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் இருந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்தது. முதற்கட்டமாக செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் மார்க்கமாக செல்லும் மேம்பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டது. அந்த மேம்பாலம் கடந்த 2022 செப்டம்பரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, பெருங்களத்தூரில் இருந்து ரயில்வே தண்டவாளத்தை கடந்து சீனிவாசா நகரில் இறங்கும் மற்றொரு பாதையும் கடந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

இதனிடயே கிளாம்பாக்கத்தில் சென்னையின் புறநகர் பேருந்து முனையம் அமைக்கப்பட்டது. அந்த பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. படிப்படியாக அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட தொடங்கின. இதனால் பெருங்களத்தூரில் ஓரளவு நெரிசல் குறைந்துள்ளது. இதனிடையே பெருங்களத்தூரில் தாம்பரம் டூ செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பெருங்களத்தூர் ஏரிக்கரையில் தொடங்கும் அந்த மேம்பாலம், ஸ்ரீராம் ஐடி கேட்வே முன்பு வரை அந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இந்த மேம்பாலத்தின் நீளம் சுமார் 832 மீட்டர் ஆகும். இந்த மேம்பாலத்தில் தற்போது 80 சதவீததிற்கும் மேலான பணிகள் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பெருங்களத்தூரில் இருந்து சதானந்தபுரம் செல்லும் தாம்பரம் கிழக்கு பகுதி பால பணிகளும் 70 சதவீதத்திற்கு மேல் நிறைவு பெற்றுவிட்டது. இந்த பாதை பணி முடிந்தால் தாம்பரம் கிழக்கு பகுதிக்கு எளிதாக செல்ல முடியும். தற்போதையில் பெருங்களத்தூர் மேம்பாலத்தில் இரண்டு பாதைகள் திறந்தும், நெடுங்குன்றம் வழியாக செல்வோருக்கு பயன் இல்லாத நிலையே உள்ளது.

இதனால் பெருங்களத்தூர் பகுதிக்குள் செல்ல வேண்டிய வாகனங்கள், வழக்கம் போல் 2 கி.மீ., துாரம் சென்று திரும்பி வந்து, ரயில்வே கேட்டை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம் பணிகள் தற்போது விரைந்து நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து மேம்பாலங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பெருங்களத்தூர் மேம்பாலம் குறித்த செயற்கைகோள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications