Sathankulam case: தந்தை - மகனை அடித்தே கொன்ற போலீஸ்.. சாத்தான்குளத்தில் நடந்தது என்ன? வழக்கின் பின்னணி
மதுரை: கொரோனா நேரத்தில் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை மகன் பென்னிக்ஸ் ஜெயராஜ் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அவர்களை போலீசார் அடித்தே கொன்றதாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு கூறியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் இருந்தது. பொதுமக்கள் வெளியே செல்லவும், கடைகளை திறக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தான் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (வயது 58), அவரது மகன் பெனிக்ஸ் (31) ஆகியோர் அதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.

விசாரணைக்காக அழைத்து சென்று கொலை
இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை மீறி பெனிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அங்கு ரோந்து வந்த போலீசார் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையை திறந்து வைத்ததாக கூறி ஜெயராஜை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றார்கள். இதையடுத்து தந்தை பெனிக்ஸ்-சும் அன்று இரவே காவல் நிலையம் சென்றார்.
அப்போது அவரையும் போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்துவதாக கூறி அடித்து தாக்கியுள்ளனர். இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. இதனையடுத்து மறுநாள் ஜூன் 20 ஆம் தேதி அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் போலீசார் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பெனிக்ஸ் 22 ஆம் தேதி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறு நாள் 23 ஆம் தேதி அதிகாலை ஜெயராஜூம் உயிரிழந்தார்.
9 போலீஸ்காரர்கள் கைது
போலீசாரின் தாக்குதலால் அடுத்தடுத்து தந்தை - மகன் இறந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தினை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. தொடர்ந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் இதுவரை நடக்காத வகையில் தடயங்களை பாதுகாக்க சாத்தான்குளம் போலீஸ் நிலையம் வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டு வரப்பட்டது.
இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் இந்த கொலை வழக்கை விசாரித்தது.
100 பேர் சாட்சியம் அளித்தனர்
கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கு விசாரணையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் ஆஜராகி விளக்கமளித்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 போலீஸ்காரர்களும் சிறையிலேயே உள்ளனர். அவர்கள் பலமுறை ஜாமீன்கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையிலும் சிபிஐ ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சி.பி.ஐயும் வழக்கு தொடர்பாக ஆயிரக்கணக்கான பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்து இருந்தது.
இதில், ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கொடூரமான சித்ரவதை செய்யப்பட்டதே மரணத்திற்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் விசாரணைக்காக 2020-ம் ஆண்டு சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பெண் போலீசார் ரேவதி, பியூலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சி.பி.ஐ. விசாரணையின் போது ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். அனைத்து தரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி முத்துக்குமரன் இன்று தீர்ப்பு அளித்துள்ளார்.
இதன்படி நீதிபதி இன்று 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்துள்ளார். அப்போது காவலர்கள் தாக்கியதால் தான் தந்தை மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். போலீசார் அவர்களை அடித்து கொலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு கூறினார். தண்டனை விவரம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.












Click it and Unblock the Notifications