சத்யபாமா அமர்ந்த சபாநாயகர் நாற்காலி.. “இதுதான் முதல்முறை” என தவெக சொல்வது ஏன்? பின்னணி என்ன?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தவெக பெண் எம்.எல்.ஏ. சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து, நேற்றைய தினம் அவையை வழிநடத்திய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. எனினும் அவையை வழிநடத்திய மாற்று சபாநாயகர்கள் பற்றின எக்ஸ்க்ளுசிவ் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
சபாநாயகர் ஜே.சி.பிரபாகர், துணை சபாநாயகர் ரவி சங்கர் 2 பேருமே குறிப்பிட்ட நேரத்தில் அவையில் இல்லாததால், மாற்று பேரவைத் தலைவர்களில் ஒருவரான திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. சத்யபாமாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

முதன்முறையாக சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த சத்யபாமா, அவையை நிதானமாகவும், நாகரீகமாகவும் வழிநடத்தினார்.. இதையடுத்து சபாநாயகர் ஜே.சி.பிரபாகர் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக, தவெக தரப்பில், ஒரு பெண் எம்.எல்.ஏ. முதல்முறையாக மாற்று சபாநாயகராக சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருப்பதாக பெருமையுடன் பேசப்பட்டு வருகிறது.
சத்யபாமா சபாநாயகர் சீட்டில்
ஆனால், இதில்தான் ஒரு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. சத்யபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தது வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றாலும், தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு பெண் எம்.எல்.ஏ. மாற்று சபாநாயகராக இருந்து அவையை நடத்தியது இதுதான் முதல் முறை அல்ல என பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஆட்சி அமைந்த பிறகு, ஒவ்வொரு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரங்களில் அவையை தடையின்றி நடத்துவதற்காக மாற்று பேரவைத் தலைவர்கள் குழு அமைக்கப்படுவது வழக்கம். பொதுவாக இதில் ஆளும் கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
பாலபாரதி, விஜயதாரணி
நமக்கு கிடைத்த பேரவை செயலக வட்டார தகவலின்படி, ருக்மணி 1937 முதல் 1939 வரை மாற்று சபாநாயகர் பொறுப்பில் இருந்துள்ளார். 1946 முதல் 1952 வரையிலும் சோடகம் அம்மனாராஜா என்ற பெண் உறுப்பினர் துணைத் தலைவர் மற்றும் மாற்று சபாநாயகர் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் மற்றும் பின்னர் தவெக சார்பில் 7 முறை வெற்றி பெற்ற பொன்னம்மாள், பேரவைத் தலைவர்கள் குழுவில் இடம்பெற்று பலமுறை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை திறம்பட நடத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாப்பா உமாநாத், திமுகவை சேர்ந்த கீதா, பூங்கோதை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி (இப்போது பாஜகவில் உள்ளார்) மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பாலபாரதி ஆகியோரும் மாற்று சபாநாயகர் பொறுப்பை ஏற்று அவையை நடத்தியிருக்கிறார்கள்.
முதல்முறை கிடையாது
தற்போதைய 17-வது சட்டமன்றத்திற்கான மாற்று பேரவைத் தலைவர்கள் பட்டியலில் தவெக சார்பில் சத்யபாமா, விஜய் சரவணன், மதார் பதுருதீன், திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பர்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த லிஸ்ட்டில் இடம்பெற்றதன் அடிப்படையில்தான் சத்யபாமாவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே, சத்யபாமாவின் நிகழ்வு தவெகவுக்கு முக்கியமான புதிய அரசியல் அடையாளமாக இருந்தாலும், பெண் எம்எல்ஏ ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தியது முதல்முறை என்ற தகவல் சரியானதல்ல என்பதே தற்போது வெளியாகியுள்ள எக்ஸ்க்ளூசிவ் தகவலாக உள்ளது...!!
- நமது சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
