நீதிமன்றம் சென்றால் ஒரு நொடி கூட நிற்காத வழக்கு.. ரஞ்சனா கைதின் பின்னணி.. சாட்டை துரைமுருகன் பதிவு
சென்னை: அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்களை தாக்கிய பாஜக பிரமுகரும், துணை நடிகையுமான ரஞ்சனாவிற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அரசு பஸ்ஸில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை அடித்து இறக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியாரை சென்னை மாங்காடு போலீசார் கைது செய்தனர். அரசு பேருந்து ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். நடிகை ரஞ்சனா பாஜக மாநில செயலாளராக உள்ளார். இவர் ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியின் கொள்ளுப்பேத்தி என்கிறார்கள். இவர், ரஜினியின் அண்ணாத்த படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

என்ன நடந்தது: சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் மாநகர அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தினார்.
பின்னர் டிரைவரிடம் இப்படி மாணவர்கள் தொங்குகிறார்களே, அவர்களை செருப்பால் அடித்து உள்ளே போகவைத்திருக்க வேண்டாமா என்று கேட்டார். பின்னர் படியில் தொங்கிய மாணவர்களை சரமாரியாகத் திட்டினார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த ரஞ்சனா நாச்சியார், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களை நடுரோட்டில் இழுத்து வைத்து கன்னத்தில் மாறி மாறி தாக்கினார். அத்துடன் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசினார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது.
தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு பேருந்தில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய துணை நடிகை ரஞ்சனா நாச்சியாரின் செயலை பலரும் கண்டித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையையும் பலர் வைத்தனர். இந்நிலையில் அரசு பேருந்தின் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்தனர்

அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களை தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் ரஞ்சனா நாச்சியார் மீது மாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சனா நாச்சியாரின் இந்த செயலுக்கு ஆதரவும் உள்ளது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் நடிகை ரஞ்சனா நாச்சியாரின் செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "நீதிமன்றம் சென்றால் ஒரு நொடி கூட நிற்காத வழக்கிற்கு கைது செய்ய திராவிட மாடல் அரசால் மட்டுமே முடியும். அவர் மாணவர்களை திட்டியது அடித்தது தவறென்றால் அவர் தடுக்காமல் விட்டு ஏதோ ஒரு மாணவர் கீழே விழுத்து விபத்துக்குள்ளாகி இருந்தால் அந்த நடத்துனரும் அரசும் பொறுப்பேற்குமா? செயலின் நோக்கத்தை பார்க்காது அதை யார் செய்தார் என்கிற பின்புலத்தை வைத்து கைது செய்வது எந்த வகையில் நியாயம் ?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications