அம்மா உற்சவர்தான்... அவரையே இயக்கிய சின்னம்மான் மூலவர்... சொல்வது அதிமுக எம்எல்ஏ
ஜெயலலிதாவையே இயக்கியர்தான் சசிகலா என்று சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் கூறியுள்ளார். ஜெயலலிதா உற்சவர்தான் என்றும் சசிகலாதான் அதிமுகவின் மூலவர் என்றும் கூறியுள்ளார்.
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்கியிருந்தாலும் சசிகலாவை யாரும் விடுவதாக இல்லை. அதிமுகவை விட்டு விலகி அமமுகவில் இணைந்த ராஜவர்மனும் அப்படித்தான் சசிகலதான் சகலமும் என்று சொன்னதோடு ஜெயலலிதாவையே இயக்கிய சசிகலதான் மூலவர் என்று கூறியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் நொடிக்கு நொடி காட்சிகள் மாறுவதால் பரபரப்பு அதிகரித்து வருகிறது. அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்னர் பல மாவட்டங்களில் போராட்டங்களில் வெடித்து வருகின்றன.

சாத்தூர் தொகுதியின் எம்எல்ஏ ராஜவர்மனுக்கு மீண்டும் போட்டியிட சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் போர்க்கொடி உயர்திய அவர் கட்சியை விட்டு விலகி டிடிவி தினகரனிடம் ஐக்கியமாகிவிட்டார்.
அமமுகவில் இணைந்த ராஜவர்மன், கொடுத்த பேட்டிதான் தற்போது பரபரப்பை பற்ற வைத்துள்ளது. கூவத்தூரில் எம்எல்ஏக்கள், அமைச்சர்களை ஒருங்கிணைத்து ஆட்சியை காப்பாற்றியவர் சசிகலா, அவர் இல்லாவிட்டால் இன்றைக்கு அதிமுகவே இல்லை என்று சொன்னார்.
ஜெயலலிதா வெளியில் வந்து மக்களை சந்திக்கும் உற்சவர் ஆனால் அந்த அம்மா ஜெயலலிதாவையே இயக்கியவர் சின்னம்மா சசிகலா. அவர்தான் அதிமுகவின் மூலவர் அவரால்தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கிறார்.
இன்றைக்கு எம்எல்ஏக்களாக, அமைச்சர்களாக இருக்கும் பலரும் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவினால் அமைச்சர்களானவர்கள்தான் என்று சொன்னார் ராஜவர்மன். ராஜேந்திரபாலாஜிக்காக அதிமுக உள்ளதா என்று கேள்வி எழுப்பிய ராஜவர்மன், கட்சியில் உழைத்த மூத்தவர்கள் பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும் குமுறிக்கொண்டிருக்கின்றனர் பலரும் அதிமுகவை விட்டு விலகுவார்கள் என்றும் கூறியுள்ளார். தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவை உற்சவர் என்றும் அவரை பின்னால் இருந்து இயக்கிய சசிகலாதான் மூலவர் என்றும் புதுவிதமாக பேசி அதிர வைத்துள்ளார் எம்எல்ஏ ராஜவர்மன்.












Click it and Unblock the Notifications