Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி
சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அவரது இடைக்கால ஜாமீன் நாளையுடன் முடிவடைவதால் அவர் சரண் அடைய வேண்டும் என்றும், இல்லையென்றால் போலீசார் சவுக்கு சங்கர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், சினிமா பட தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கேட்டு மனு
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சவுக்கு சங்கர் உடலில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதால் அவருக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 ஆம் தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
ஜாமீனில் வெளியே வந்த சவுக்கு சங்கர், ஜாமீன் நிபந்தனைகளை மீறி யூடியூப்பில் வீடியோ வெளியிடுகிறார் எனவும், விசாரணை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசுவதாகவும் எனவே, சவுக்கு சங்கரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எந்த நிபந்தனைகளையும் மீறவில்லை
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்றும், அவரது உடல் நிலையை பரிசோதனை செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனை முதல்வர் தலைமையில் மருத்துவர்கள் குழு அமைத்து உடல் நிலையை கண்காணித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
இதன்படி, சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் அடங்கிய அமர்வில் பிப்ரவரி 18 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், சவுக்கு சங்கர் எந்த நிபந்தனைகளையும் மீறவில்லை.
நிபந்தனைகளை மீறினால் கைது செய்யலாம்
அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. எனவே அவரது ஜாமீனை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து, கூறிய நீதிபதிகள், சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவது தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நாளைக்குள் சரண் அடைய வேண்டும்
இந்த நிலையில், சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. அதில், சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சவுக்கு சங்கருக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த வழ்க்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீன் நாளை (மார்ச் 25) முடிவுக்கு வருவதால் அவர் சரண் அடைய வேண்டும் என்று கூறினார். அப்போது கூறிய நீதிமன்றம், சவுக்கு சங்கர் சரண் அடையாவிட்டால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கலாம். பிரதான மனுவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இடைக்கால ஜாமீன் அளித்த உத்தரவில் நீதிமன்றம் எந்த கருத்தையும் பதிவு செய்ய வேண்டியது இல்லை என்றும் கூறியது.












Click it and Unblock the Notifications