தெரு நாய் கடி விவகாரம்! எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? தமிழக தலைமைச் செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தெரு நாய் கடி விவகாரம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தலைமைச் செயலாளர்கள் வரும் திங்கட்கிழமை ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாய்க்கடி விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய இரண்டு மாதகால அவகாசம் வழங்கியும், பல மாநில அரசுகள் அதை செய்யாததால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

தற்போது வரை மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள்தான் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்திருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேதி கடந்து ஏறத்தாழ 2 மாதங்கள் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா? என மாநில அரசுகளிடம் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பியிருக்கிறது.
பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடுத்த திங்கட்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது அதிருப்தி தெரிவித்த நீதிபதி விக்ரம் நாத், "நீதிமன்றம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. நாங்கள் அளித்த உத்தரவு பரவலாகப் பேசப்பட்டது. நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இதனால், வெளிநாடுகள் மத்தியில் நமது நாட்டின் மீதான பார்வை குறைந்திருக்கிறது. நாங்களும் செய்தித்தாள்களில் படிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "டெல்லி ஏன் இன்னும் பத்திரம் தாக்கல் செய்யவில்லை? திங்கட்கிழமை ஆஜராகும்போது தலைமை செயலாளர் உரிய விளக்கத்துடன் வர வேண்டும். இல்லையெனில் அபராதம் உட்பட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகள் செய்தித்தாள்கள் படிப்பதில்லையா? அல்லது சமூக வலைத்தளங்களை பார்ப்பதில்லை? எங்கள் உத்தரவுகள் பரவலாக செய்தியாக வெளியாகியிருந்தன. இருப்பினும் அதிகாரிகள் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை" என்று அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
தெரு நாய்க்கடி சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 11 அன்று, இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவு பெரும் கவனத்தை பெற்றிருந்தது. அதாவது இனி வீதிகளில் நாங்களே இருக்கக்கூடாது. அவற்றை காப்பகங்களில் பிடித்து அடைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து வழக்கு விசாரணை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த அமர்வு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி மற்றொரு உத்தரவை கொடுத்தது. அதில், எல்லா நாய்களையும் காப்பகங்களில் அடைத்து வைக்க தேவையில்லை. பாதிக்கப்பட்ட நாய்களை அடைத்து வைத்தால் போதுமானது. மற்ற நாய்களுக்கு தடுப்பூசி போட்டு அவற்றை வீதிகளிலேயே விட்டவிடலாம் என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்த உத்தரவால் விலங்கு நல ஆர்வலர்களின் போராட்டம் குறைந்தது. இருப்பினும் மறுபுறம் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தன. இன்று வரை இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண முயாத நிலை இருக்கிறது.












Click it and Unblock the Notifications