காலாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு மேலும் ஒரு “குட்” நியூஸ்! ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோல, பள்ளிகள் திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளையுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைகின்றன. செப்டம்பர் 28, 29, 30, மற்றும் அக்டோபர் 1, 2 என செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை என ஐந்து நாட்கள் மட்டும் காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கம், விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை வைத்திருந்தது.

காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் காந்தி ஜெயந்தி என மூன்று நாட்கள் விடுமுறையில் அடங்கி விடுகிறது. மீதமுள்ள இரண்டு நாள் மட்டும் தான் காலாண்டு தேர்வு விடுமுறை கணக்கில் வருகிறது. இதன் காரணமாக ஆசிரியர் சங்கம் சார்பில் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியுள்ளனர். காலாண்டு தேர்வு விடுமுறையை ஒன்பது நாட்களாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இந்த குறைந்த விடுமுறை நாட்களில், காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை திருத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வது அதிக சுமையை ஏற்படுத்தும். பணிகள் அதிகமாக இருப்பதால், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களை ஒன்பது நாளாக அதிகரிக்க வேண்டும் என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்ற பள்ளிக்கல்வித் துறை, காலாண்டு விடுமுறையை அக்டோபர் 6 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 7 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அந்த அறிவிப்பில், 1,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்நிலையில் காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 28 முதல் அக்டோப 6 வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கல்வித்துறை இந்த ஆணையினை பிறப்பித்திருக்கிறது.
மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நாள் அன்றே அதாவது அக்டோபர் 7 ஆம் தேதி அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications