அரசுப் பள்ளிகளில் மார்ச் 1 முதல் அட்மிஷன் ஆரம்பம்! தலைமை ஆசிரியர்களுக்கு டாஸ்க் கொடுத்த அதிகாரிகள்!
சென்னை: அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல பெருமையின் அடையாளமாக மாற வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறி வரும் நிலையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
5 வயதை பூர்த்தி செய்த குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையைப் பெறுகின்ற பொழுது, பல்வேறு துறைகளில் இயல்பாகவே உயர்வு பெறும் என்ற நோக்கத்தோடு பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகப்படுத்தி வருகிறார். இந்தாண்டு பட்ஜெட்டில் கூட பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் ரூபாய். 44,042 கோடி ஒதுக்கியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். உயர்தர கற்றல் – கற்பித்தல் சூழலை உருவாக்க அரசு நடுநிலைப் பள்ளிகளில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளன.
அதேபோல் முதற்கட்டமாக விரைவில் 80,000 ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்பட உள்ளன. இவை அனைத்துமே அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக முன்னெடுக்கப்படும் பணிகளாகும்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து அனைத்து பள்ளி வயதுடைய குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்திட பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே பள்ளிக்கல்வித்துறை சார்பில் விழுதுகள் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மணற்கேணித் திட்டம், இல்லம் தேடிக்கல்வித் திட்டம், நம்பள்ளி நம்பெருமை, நான் முதல்வன் என எண்ணற்றத் திட்டங்கள் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கென ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications