School holiday: கனமழை! நாளை 3 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை.. சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு லீவு
சென்னை: சென்னையில் நாளைக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொடர் கனமழை காரணமாக பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நேற்று மற்றும் இன்று சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை விட்டு விளாசியது.

திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட்
தொடர்ந்து விடாமல் பெய்த மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. இன்று மழை சற்று குறைந்தது போல் இருந்தாலும், இடையிடையே மழை பெய்து வருகிறது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதற்கிடையே இன்று வானிலை ஆய்வு மையம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டது.
நாளை திருவள்ளூரில் விடுமுறை
வானிலை அறிவிப்புக்கு ஏற்றார் போலவே மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி வந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இரவும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் தான் நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையாக குறைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் கனமழை காரணமாக பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
இதேபோல் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் தேங்கி கிடப்பதாலும், தொடர்ந்து ஒரு சில இடங்களில் மழை பெய்து வருவதாலும் நாளை புதன்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார். கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை
செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றும் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து
கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டதன் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications