நீட் தேர்வுக்கு அச்சம்.. தற்கொலை செய்யும் மாணவர்கள்.. பள்ளி நலக்குழு உருவாக்க அரசு வலியுறுத்தல்
சென்னை: மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளி முதல்வர் தலைமையில் பள்ளி நலக்குழு உருவாக்கலாம். அதன் உறுப்பினர்கள் தற்கொலை உள்ளிட்ட நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும் என வழிகாட்டுதல் வரைவை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
நீட் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயங்களில் மாணவர் தற்கொலைகள் பரவலாக நடக்கின்றன. மேலும் பல்வேறு காரணங்களாலும் மாணவர்கள் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். நீட் தேர்வு பல்வேறு மாணவ மாணவிகளின் உயிர்களை காவு வாங்குகிறது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் வலுவடைந்து வருகிறது. போட்டித் தேர்வு பயிற்சி நகரமான ராஜஸ்தானின் கோட்டாவில் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டில் இந்தியாவில் சுமார் 13 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அரசுத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்கள் 2021ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்டோரின் எண்ணிக்கையை 4.5 சதவீதம் அதிகம் என்பதைக் காட்டுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி , ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய ஏழு லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பது மட்டுமல்லாமல் 15-29 வயதுடையவர்களில் மரணத்திற்கு நான்காவது முக்கிய காரணமாக தற்கொலை உள்ளது எனத்தெரியவருகிறது.
நீட் பயிற்சி மையங்களில் சமீபத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெற்றோர்களை கவலையில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தற்கொலைகளை தடுப்பதற்காக 'உம்மீட்' எனும் வழிகாட்டு வரைவை மத்திய பள்ளிக் கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த வரைவில் பல்வேறு வழிகாட்டுதல்கள் இடம்பெற்று உள்ளன.
பள்ளி முதல்வர் தலைமையில் பள்ளி நலக்குழு உருவாக்கலாம். அதன் உறுப்பினர்கள் தற்கொலை உள்ளிட்ட நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் பெற்றோரோ அல்லது அதை அறியும் சமூகத்தினரோ நலக்குழுவினரிடம் தெரிவித்து தற்கொலையை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் முக்கியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளியில் சக மாணவர்களுடன் ஒப்பிடுதல், தோல்வியை கண்டு அஞ்சுதல், தோல்வியை நிரந்தரம் என எண்ணி அதிலிருந்து மீள முடியாமல் தவித்தல், படிப்பதற்கு பயப்படுதல்,வெற்றி அளவீடு குறித்த பயங்கள் உள்ளிட்டவற்றை களைய முயற்சிக்க வேண்டும்.
காலி வகுப்பறைகளை மூட வேண்டும், பள்ளி வளாகத்தின் இருள் சூழ்ந்த பகுதிகளில் விளக்கு வசதிகள் செய்ய வேண்டும், தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணம் கொண்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்டால், அதை உணர்வுப்பூர்வமாக அணுக வேண்டும், விஷயத்தின் தீவிரத்தை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மாணவர்களுடன் ஒப்பிடுவது, தோல்வியை நிரந்தரமானதாக கருதுவது, கல்வி திறன் மட்டுமே வெற்றியின் ஒரே அளவீடாக பேசுவது போன்ற தவறான எண்ணத்திற்கு வழிவகுக்கும் கருத்துக்களை நிராகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பள்ளி முதல்வர் தலைமையில் நல்வாழ்வு குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மாணவர்களை கண்காணித்து நெருக்கடிமான சூழ்நிலைகளை கையாள்வதில் கவனம் செலுத்த வேண்டும். மனநலம் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதோடு இந்த முயற்சியில் அனைத்து பங்குதாரர்களையும் இணைக்கச் செய்யும் வகையில், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் சமூகம் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டுமெனவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications