கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!
சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து அனைத்து விதமான பள்ளிகளும் இன்று (ஜூன் 4) முதல் திறக்கப்பட உள்ளன. முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 55,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 1.15 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) இறுதித் தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
தமிழகத்தில் இந்தாண்டு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் வழக்கத்தைவிட முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு மார்ச் 2 முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரையும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் 16 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாள்கள் பள்ளி திறப்பை பள்ளிக்கல்வித் துறை ஒத்திவைத்தது. அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்கு வரவுள்ளனர்.
முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் போன்றவற்றை விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய பேருந்து பயண அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னதாக, ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னை எம்எம்டிஏ காலனியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications