பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.. ஸ்நாக்ஸ் முதல் ரொக்கப் பரிசு வரை.. சென்னை மேயரின் அசத்தல் அறிவிப்புகள்
சென்னை: சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்நாக்ஸ், முழு மதிப்பெண் பெற்றால் ரொக்கப்பரிசு, கல்வி சுற்றுலா, கரியர் கைடன்ஸ் உள்ளிட்ட திட்டங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2023-24ஆம் ஆண்டுக்கான மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார். சென்னை ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் பட்ஜெட் கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டம் தொடங்கியதும் சென்னை மேயர் பிரியா பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சியின் பள்ளிகளுக்கும், மாணவர்களின் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா
குறிப்பாக சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கு கரியர் கைடன்ஸ் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு ஸ்நாக்ஸ் திட்டம்
அதேபோல், பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்களில் ஹேப்பி கிளாஸ் நடத்தப்படும் என்றும், நன்னெறி வகுப்புகள் கற்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசுப் பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்படும் என்றும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளில் மாலையில் சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முழு மதிப்பெண் பெற்றால் ரொக்கப்பரிசு
இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மாலையில் அவித்த சுண்டல் அல்லது பயிறு வகைகள் வழங்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். அதேபோல் 2023-23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் பிரியா அறிவித்துள்ளார்.

கல்வி கட்டணம்
அதுமட்டுமல்லாமல் ஜேஈ, கிளாட், நீட் போன்ற போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் முழுவதும் மாநகராட்சியே செலுத்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications