''காவு வாங்கும் ஐஐடி! தொடரும் தற்கொலைகள்! பழி சுமத்தி தப்பிக்கும் நிர்வாகம்''! கொதிக்கும் எஸ்டிபிஐ!
சென்னை ஐஐடியை வெளுத்து வாங்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி.
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி விட்டதாக எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வேதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் உயிர்களை காவு வாங்கும் இடமாக மாறுவதற்கு அங்கு நிலவும் சாதி, மத ரீதியிலான ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்தாததே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புஷ்பக் ஸ்ரீ சாய் என்ற மாணவர் விடுதி அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு மாதத்திற்கு முன்பாக இதே சென்னை ஐஐடியில் எம்.எஸ். எலெக்ட்ரிக்கல் இன்ஜினீரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது என்பது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது.

மன அழுத்தம்
இந்நிலையில், மாணவர்களின் தற்கொலைக்கு பொருளாதாரம், குடும்பப் பிரச்சனை, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். பிரச்சனைகளை மாணவர்கள் வெளிப்படுத்தாததால் அவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க முடிவதில்லை என சென்னை ஐ.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது. மாணவர்களின் தற்கொலைகளுக்கு மன அழுத்தம் தான் காரணம் தான் என்றாலும், சென்னை ஐஐடி குறிப்பிடுவது போன்று அது குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் மட்டும் ஏற்படுவதில்லை. அதற்கு அங்கு நிலவும் பல்வேறு வகையான சாதி, மத ஒடுக்குமுறைகளும், மாணவர்களுக்கு அளிக்கப்படும் நெருக்கடிகளும்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

சாதி, மத ரீதியிலான பாகுபாடு
ஐ.ஐ.டி. உள்ளிட்ட ஒன்றிய அரசின் பெரும்பாலான உயர்கல்வி நிறுவனங்களில் சாதி, மத ரீதியிலான பாகுபாடு என்பது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான உணர்வுகளை தூண்டி தகுதியில்லாதவர்கள், தகுதியற்றவர்கள் என்று கேலி செய்வதன் மூலம் பட்டியலின மாணவர்கள் மனரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். மாணவர்களுக்கு மட்டுமின்றி பேராசிரியர்களிடமும் கூட சாதிய பாகுபாடு காட்டப்படுகின்றது என்பது குறித்த பல்வேறு புகார்கள் இன்றும் உள்ளன.

பாத்திமா லத்தீஃப்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை விவகாரத்தில், தனது தற்கொலைக்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்று மாணவி பாத்திமா லத்தீஃப் தெளிவாக குறிப்பெழுதி வைத்த பின்னும், குறிப்பிட்ட அந்த பேராசிரியரை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழல் நிலவும் சென்னை ஐ.ஐ.டியில் தொடரும் தற்கொலைகளுக்கு மாணவர்களின் குடும்ப சூழல், பொருளாதாரத்தால் ஏற்படும் மன அழுத்தம் தான் காரணம் என்று சொல்லி, தற்கொலைகளுக்கு மாணவர்கள் மீது பழி சுமத்தி தப்பிக்கும் ஐ.ஐ.டி. போக்கு ஏற்புடையதல்ல.

காவு வாங்கும் இடம்
ஐ.ஐ.டி. உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் உயிர்களை காவு வாங்கும் இடமாக மாறுவதற்கு அங்கு நிலவும் சாதி, மத ரீதியிலான ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்தாததும், அரசுகள் அதனை கண்டும் காணாமலும் இருப்பது தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஆகவே, ஐ.ஐ.டி. உள்ளிட்ட ஒன்றிய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் மாணவர்களின் தற்கொலை மரணங்களை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச்சாட்டிற்கு ஆளாகும் பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு சிவில் சமூகத்தினரை உட்படுத்தி குழு அமைத்து தற்கொலைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications