கொரோனாவால் இறந்தவர்களுக்கு... இறுதிச்சடங்கை முன்நின்று நடத்தும் எஸ்.டி.பி.ஐ. தன்னார்வலர்கள்
சென்னை: கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணியமான முறையில் இறுதிச்சடங்கு நடத்தி உடலை அடக்கம் செய்து வருகிறது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் குழு.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் உடலை தொட அவர்களது உறவினர்களே அஞ்சும் நிலையில், முழு பாதுகாப்பு கவச உடைகளுடன் இந்த தொண்டை செய்து வருகிறது இந்த குழு.
எந்தவித கட்டணமும் பெறாமல் முழுக்க முழுக்க சேவை மனப்பான்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இறுதிச்சடங்குகளை நடத்தி வருவதாக கூறுகின்றனர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள்.

2009-ல் தொடக்கம்
சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்பதன் சுருக்கமே எஸ்.டி.பி.ஐ. இந்தக் கட்சி கடந்த 2009-ல் தொடங்கப்பட்ட நிலையில் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வலிமையான அமைப்புகளை கொண்டுள்ளன. தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் அதனை தாண்டியும் பல்வேறு மக்கள் நலத் தொண்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி தன்னை ஈடுபடுத்தி வருகிறது. 2015 சென்னை வெள்ளம், கஜா புயல், வர்தா புயல் போன்ற தருணங்களில் உதவிக்கரம் நீட்டிய இந்தக் கட்சி இப்போது கொரோனா பேரிடரிலும் சேவைக்கரம் நீட்டியுள்ளது.

இறுதிச்சடங்குகள்
கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய யாரும் முன்வர விரும்பாத சூழலில் அந்தப் பணியை முன் நின்று செய்து வருகிறது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் குழு. இதில் இஸ்லாமியர்கள், இந்துக்கள், கிறிஸ்துவர்கள் என்ற எந்த மதப்பாகுபாடும் காட்டாமல் அவரவர் மதச்சடங்கு படி அடக்கம் செய்கிறார்கள் இந்த சேவை நாயகர்கள். இதற்கு ஒரு உதாரணமாக புதுச்சேரியில் கொரோனாவால் இறந்த இந்து ஒருவரின் உடலை இந்து மதவழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்து தகனம் செய்திருக்கிறது இந்த குழு.

உறவினர்கள் அச்சம்
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் முன் நின்று நடத்தும் இந்தப் பணிகளுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி முழுமையாக சப்போர்ட் செய்வதாக கூறுகிறார் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.கே.கரீம். இதேபோல் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை அவரது உறவினர்களே வாங்க அஞ்சிய நிலையில், எஸ்.டி.பி.ஐ. தன்னார்வலர்கள் குழு அந்த உடலை பெற்று இறுதிச்சடங்கு செய்ததாக தெரிவிக்கிறார்.

பல மாநிலங்கள்
கர்நாடகா, ஜார்கண்ட், உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை தடை செய்ய வேண்டும் என சிலர் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையிலும், மக்கள் நலத் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறுகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஏ.கே. கரீம். தமிழக சுகாதாரத்துறை தரப்பில் இருந்து ஊக்கமும், ஆதரவும் கிடைத்தால் கொரோனாவால் இறப்பவர்களின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அவர் தெரிவிக்கிறார்.












Click it and Unblock the Notifications