சீமான் பொது வேட்பாளரா?.. திமுக, அதிமுக ஏற்காதா? தராசு ஷ்யாம் சொன்ன பின்னணி
சென்னை: தமிழக அரசியலில் விஜய்யின் தவெக புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், இடைத்தேர்தல்களை மையமாக வைத்து கட்சிகளிடையே புதிய அரசியல் கணக்குகள் பேசப்படுகின்றன. குறிப்பாக, சீமான் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், பொதுவேட்பாளர் என்ற கருத்து தமிழக அரசியலில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர், வழக்கறிஞர் தராசு ஷ்யாம் தனது அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்க்குரல் டிவி சேனலில் பேட்டி தந்துள்ள தராசு ஷ்யாம், "பொது வேட்பாளர் என்ற கருத்தை திமுக எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ளாது.. இதற்கு எனக்கு 30 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமே உதாரணம்.

1996 சட்டமன்ற தேர்தல்
1996 சட்டமன்ற தேர்தல் காலத்தில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது. அப்போது ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அழகர் சின்னரெட்டி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. முன்னாள் சபாநாயகர் ராஜாராம் அந்தக் குழுவின் தலைவராக இருந்தார். நானும் அதில் உறுப்பினராக இருந்தேன்.
அப்போது பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதியை சந்தித்து பேசினோம். அறிவாலயத்தில் பலமுறை சந்தித்து எங்கள் கருத்தை தெரிவித்தோம். ஒவ்வொரு சந்திப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்தது. கடைசியாக ஆலிவர் ரோட்டில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.
ஜெயலலிதாவின் வேட்பாளர்
அப்போது கருணாநிதி, திமுக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் மற்றும் கட்சியினர் இதை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் வேட்பாளர் வெற்றி பெறட்டும், அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம் என்று நான் கூறினேன். ஆனால், கட்சியை பலிகொடுக்க முடியாது என்று கருணாநிதி தெரிவித்தார். அதன்பிறகு அந்த முயற்சி கைகூடவில்லை. குறைந்தது ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளாவது நடத்தியிருக்கிறோம் என்று ராஜாராம் பிறகு கூறினார்.
அதிமுகவும் பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்ளாது. கூட்டணி அமைப்பது வேறு.. எல்லா கட்சிகளும் சேர்ந்து ஒரே பொது வேட்பாளரை நிறுத்துவது வேறு. தமிழகத்தில் நான்கைந்து அணிகள் இருக்கும் நிலையில், பொது வேட்பாளர் என்ற முடிவுக்கு வருவது கடினம். 1996 தேர்தலில்கூட நான்கு அணிகள் இருந்தன. அந்த நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் திடீரென உருவானது.
பொதுவேட்பாளர் சாத்தியமா
கூட்டணி அமைப்பது என்பது சாத்தியம். ஆனால், பொதுவேட்பாளர் என்ற கருத்து மிகவும் கடினமானது. சட்டமன்றத் தேர்தலில் அதற்கான வாய்ப்பே இல்லை.
இருந்தாலும், இப்போது இப்படியான பேச்சு ஏன் வருகிறதென்றால், தவெகவை வீழ்த்த வேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில்தான் இந்தப் பேச்சு எழுகிறது. மற்றபடி, இது அரசியல் ரீதியாக சாத்தியம் என்று நான் நினைக்கவில்லை.
சீமான் - அம்பாசமுத்திரம்
சீமான் தன்னை பொது வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. மற்ற கட்சிகள் இதுபற்றி தீவிரமாக பேசியிருந்தால் அவர் தானாக அறிவித்திருக்க வேண்டிய நிலை வந்திருக்காது. அவர் தேர்தலில் போட்டியிடுவாரா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
சீமானுக்கு ஏற்கெனவே கிடைத்த வாக்கு சதவீதம் ஒரு சதவீதத்துக்கும் மேல் செல்வது கடினம். இடைத்தேர்தலில் அந்த வாக்கு சதவீதம் அதிகரிப்பதைவிட குறையவே வாய்ப்பு இருக்கிறது. ஏதாவது ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்பதை தெரிந்துகொள்வதற்காக அவர் இதை முயற்சி செய்து பார்க்கலாம். அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
