டாஸ்மாக் கடைகள் மூடியதுமே மனமகிழ் மன்றங்களில் திரண்ட குடிமகன்கள்.. தர்மபுரி டூ திருச்சி நடந்தது?

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான விதிமுறைகளில் தமிழக அரசு பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. ஒருபக்கம் பார் நடத்துபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் என்றால், இன்னொருபக்கம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் மனமகிழ் மன்றங்களை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு விவகாரங்களிலும் கவனம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் என்ன?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான முந்தைய அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஜூன் மாதம் வரை அனுமதி நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தவெக அரசு பொறுப்பேற்றதும் அக்டோபர் மாதம் வரையும், பிறகு மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து டிசம்பர் மாதம் வரையும் அனுமதி வழங்கப்பட்டது.

TASMAC Dharmapuri Tamil Nadu Liquor Shops Private Bars

டாஸ்மாக் கடைகள்

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை நடத்துவதற்கான விதிகளில் தமிழக அரசு திருத்தங்களை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தனித்தனி அடையாளப் பலகை அமைக்க வேண்டும். அதில் தமிழில் பெயர்ப்பலகை, கடை எண் மற்றும் உரிமம் தொடர்பான விவரங்கள் இடம்பெற வேண்டும்.

டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது அருந்த அனுமதிக்கப்படாது.

என்னென்ன வசதிகள்?

பார்களில் குறைந்தபட்சம் 20 சதுர மீட்டர் தரைப்பரப்பு இருக்க வேண்டும். குடிநீர், கை கழுவும் வசதி, போதுமான மேஜைகள் மற்றும் நாற்காலிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.

பாருக்குள் மது அருந்துவது வெளியில் தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது, மது உடல்நலத்துக்கு கேடு என்ற எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற வேண்டும்.

வழிபாட்டுத்தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் பார் அமைக்க அனுமதி கிடையாது. குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டு திட்டப் பகுதிகளிலும் பார்கள் அமைக்கக்கூடாது. எந்தவொரு ஓட்டல் வளாகத்திற்குள்ளும் பார் அமைக்க அனுமதி இல்லை.

21 வயதுக்கு கீழ் நோ என்ட்ரி

டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது அந்த கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள்ளோ பார் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்களை தனியாருக்கு டெண்டர் மூலம் ஒப்படைக்க வேண்டும்.

மேலும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. அவர்களை பாருக்குள் அனுமதிக்கவும் கூடாது. அதேபோல், 21 வயதுக்கு குறைவானவர்களை பார் பணிகளில் அமர்த்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழுப் பொறுப்பும் பார் நடத்துபவரையே சாரும்.

பார்களில் விற்கப்படும் மதுபானங்களின் விலைகளை வெளிப்படையாக காட்சிப்படுத்த வேண்டும். தினசரி விற்பனை மற்றும் மதுபான இருப்பு விவரங்களையும் மின்னணு முறையில் பராமரிக்க வேண்டும்.

திருவள்ளுவர் தினம், காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் கட்டாயம் மூடப்பட வேண்டும்.

தனியார் பார்களில் கூட்டம்

இதனிடையே, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் தனியார் மனமகிழ் மன்றங்களில் மக்கள் குவிந்த சம்பவங்களும் கவனம் பெற்றுள்ளன.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் நவம்பர் 1-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை மதுபானம் வாங்க வந்தவர்கள் கடைகள் திறக்கப்படாததால் ஏமாற்றமடைந்தனர்.

இதையடுத்து, சில பகுதிகளில் தனியார் மனமகிழ் மன்றங்களுக்கு மக்கள் சென்றுள்ளனர்.. திருச்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மனமகிழ் மன்றங்களில் மதுபான விற்பனை அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூரில் மதுபானம் வாங்குவதற்காக மக்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு வந்து கூட்டத்தை கலைத்தனர்.

தனியார் மையங்கள்

இதுகுறித்த வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றுள்ளது.. சில இடங்களில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.70 வரை வசூலிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் தனியார் மையங்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒருபுறம் டாஸ்மாக் பார்களை நடத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றியுள்ள நிலையில், மறுபுறம் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்போது தனியார் மனமகிழ் மன்றங்களில் கூட்டம் அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+