திமுக, தவெக போட்ட பிச்சையில் தான் காங்கிரஸே..நினைவிருக்கிறதா தம்பி! மாணிக்கத்தை விளாசிய நயினார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கையில் இருக்கும் ஒரு தொகுதியையும் தக்க வைக்க முடியாத நிலையில் இருப்பவர் மேடைக்கு மேடை காங்கிரசை ஒழிப்போம் என சவால் விடுவது தமிழக அரசியலில் மிகப்பெரிய நகைச்சுவை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை விமர்சித்து இருந்தார் காங்கிரஸ் கமிட்டியின் மாணிக்கம் தாகூர். இந்த நிலையில் திமுகவும் தவெகவும் போடும் பிச்சையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிழைத்துக் கொண்டிருப்பது நினைவு இருக்கிறதா தம்பி? என பதிலடி கொடுத்துள்ளார் நயினார் நாகேந்திரன்.

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," ஞாபகம் வருகிறதா? ஞாபகம் வருகிறதா? தமிழர்களுக்கு காங்கிரஸ் இழைத்த துரோகம் ஞாபகம் வருகிறதா? தம்பி திரு. மாணிக்கம் தாகூர் அவர்களே, பிறரை விமர்சிப்பதற்கு முன்பு உங்கள் காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாற்றையும், இன்றைய நிலையையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தொடர்ந்து 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ். அத்தகைய வரலாறு கொண்ட உங்கள் கட்சி, இன்று தமிழ்நாட்டில் எந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை முதலில் எண்ணிப் பாருங்கள்!

Nainar Nagendran

நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் 18 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த நீங்கள், இன்று 5 சட்டமன்ற உறுப்பினர்களாகச் சுருங்கிவிட்டீர்கள். வரும் தேர்தலில் எவ்வளவு முயன்றாலும் அந்த 5 இடங்கள் கூட மிஞ்சாது! திரு. ராஜீவ் காந்தி தலைமையில் 400 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, இன்று தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களாக மூன்று இலக்க (100) எண்ணிக்கையைக் கூடத் தொட முடியாத நிலைக்குச் சுருங்கிவிட்டதே; அந்தப் பழைய காலம் ஞாபகம் வருகிறதா? திரு. ராகுல் காந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளதே, அது ஞாபகம் வருகிறதா?

வாக்குத் திருட்டு

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், குஜராத், ஒடிசா எனப் பல முக்கிய மாநிலங்களில் பல தசாப்தங்களாக உங்கள் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கே வர முடியாமல் போனது ஞாபகம் வருகிறதா? வாக்குத் திருட்டு குறித்துப் பேசுகிறீர்களே... அப்படியானால் கேரளாவில் வாக்குகளைத் திருடித்தான் ஆட்சிக்கு வந்தீர்களா? காவிரி நதிநீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடகத்திலும் வாக்குகளைத் திருடித்தான் ஆட்சிக்கு வந்தீர்களா?

தவெக

எந்தவொரு கொள்கைக்கும் நேர்மையின்றி, சுய ஆதாயம் தேடும் சந்தர்ப்பவாத அரசியலே காங்கிரஸின் வழக்கம். திமுகவின் பெயரால் வாக்குகளைப் பெற்று, தவெக-வை (TVK) எதிர்த்துப் பரப்புரை செய்துவிட்டு, தற்போது அதே தவெக-வுடன் பேரம் பேசி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் உங்களுக்குப் பிறரை விமர்சிக்க என்ன தகுதி இருக்கிறது? தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததும், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர் உரிமைகளில் தமிழக விவசாயிகளின் நலன்களைத் தொடர்ந்து புறக்கணித்ததும் ஞாபகம் வருகிறதா?

சோனியா காந்தி

இலங்கையில் வாழும் நம் தமிழின உறவுகளை இந்திய அமைதிப்படை (IPKF) மூலம் படுகொலை செய்ததும், முள்ளிவாய்க்காலில் உங்கள் கட்சித் தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 1.5 லட்சம் தமிழர்கள் உயிரோடு கொன்று குவிக்கப்பட்டதும் ஞாபகம் வருகிறதா?!

அவசரநிலை

1975-இல் அவசரநிலையை (Emergency) கொண்டுவந்து ஜனநாயகத்தை முடக்கியதும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை 90 முறை கலைத்ததும் உங்கள் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், ஜனநாயகத்தை மதிக்கும் பாஜக ஆட்சியில் அவ்வாறு கலைக்கப்பட்ட மாநில அரசுகளின் எண்ணிக்கை பூஜ்ஜியம்! உங்கள் கட்சியின் அந்த ஜனநாயக மீறல்கள் ஞாபகம் வருகிறதா?

பாரதிய ஜனதா கட்சி

வெறும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பயணத்தைத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சிதான் இன்று ஆலமரம் போல வளர்ந்து நாட்டையே ஆட்சி செய்கிறது. அதேபோல, இங்குள்ள 1 சட்டமன்ற உறுப்பினரைச் சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள் - இதுவே எங்கள் வளர்ச்சியின் தொடக்கம்! இந்திய அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஆளுமைகளான திரு. ராஜாஜியும், திரு. காமராஜரும் வளர்த்த கட்சி, இன்று திமுகவும் தவெக-வும் போடும் பிச்சையில் தமிழ்நாட்டில் பிழைத்துக் கொண்டிருக்கிறது. நினைவிருக்கிறதா தம்பி, நினைவிருக்கிறதா?!" எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+