"மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லணே" - நகைக்கடையில் கொள்ளையடித்து கைதான நிஷாந்த் பேட்டி!
மதுரை: "மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லணே.." என மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கொள்ளையடித்து கைதான நிஷாந்த், போலீஸ் வேனில் செல்லும்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மதுரை பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தடயங்களை அழித்துவிட்டுத் தப்பிய குற்றவாளிகளைப் பிடிக்க மதுரை மாநகர காவல்துறையின் 9 தனிப்படைகள் களமிறங்கின.

சிசிடிவி காட்சிகள் மற்றும் கடை ஊழியர்களின் உதவியுடன் கொள்ளையில் தொடர்புடைய நிஷாந்த், அவருடைய காதலி யூடியூபர் மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நிஷாந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணை தொடங்கியதும் நீதிபதி முன்னிலையில் பேசிய நிஷாந்த், "இந்த நகைக்கடை கொள்ளைச் சம்பவத்திற்கும், எனது தோழி மீனாட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதேபோல் எனது தந்தைக்கும் இதில் எவ்வித தொடர்பும் கிடையாது" என்று தெரிவித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, "இந்த வழக்கில் யாருக்குத் தொடர்பு இருக்கிறது, யாருக்கு இல்லை என்பதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். காவல்துறை உங்களைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரியுள்ள மனு மீது மட்டுமே தற்போது விசாரணை நடைபெறுகிறது" என்று கூறினார்.
அதைத்தொடர்ந்து, வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பதைக் கண்டறிய நிஷாந்த்தை ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராஜபிரபு அனுமதி அளித்து உத்தரவிட்டார். நிஷாந்தை துன்புறுத்த கூடாது, வழக்கறிஞரை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டார்.
நீதிமன்ற விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், மீனாட்சிக்கு இதில் தொடர்பில்லை என்றே நிஷாந்த் மீண்டும் கூறியுள்ளார். அங்கு நின்றிருந்த செய்தியாளர்களிடம், "மீனாட்சிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லணே.." என நிஷாந்த் கூறியுள்ளார்.
மாடக்குளம் பகுதியில் உள்ள நிஷாந்த் குடும்பத்தினருக்கு சொந்தமான இடத்தில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை போலீசார் மீட்டனர். நிஷாந்திடம் விசாரணை நடத்தி மேலும் 6 கிலோவிற்கும் அதிகமான நகைகளை மீட்டனர். இதுவரை இந்த கொள்ளை வழக்கில் 11 கிலோவிற்கும் அதிகமான தங்க மற்றும் வைர நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு நாள் போலீஸ் காவலில் நிஷாந்திடம் நடத்தப்படும் விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஷாந்த் உண்மையைச் சொல்கிறாரா அல்லது மீனாட்சியை காப்பாற்றுவதற்காக மாற்றிச் சொல்கிறாரா என போலீசார் விசாரணை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




Click it and Unblock the Notifications
