கிருஷ்ணகிரியில் 1 ஏக்கர் நிலம் அபகரிப்பு.. உயிருடன் இருக்கும் மூதாட்டியை இறந்ததாக காட்டியது எப்படி?
கிருஷ்ணகிரி: உயிருடன் இருக்கும் ஒரு மூதாட்டி இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து, அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்துள்ளது... பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மூதாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.. என்ன நடந்தது? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தி. இவரது கணவர் ராமன் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கிருஷ்ணகிரி கோவிந்தி
இந்த நிலையில், கடந்த 2010-ம் ஆண்டிலேயே கோவிந்தி இறந்துவிட்டதாக கூறி, அதே பகுதியை சேர்ந்த ஜோதி, பச்சையம்மாள், மாரியப்பன், சுரேஷ் ஆகிய 4 பேர் போலியான வாரிசு சான்றிதழ் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த சான்றிதழை பயன்படுத்தி, கோவிந்திக்கு சொந்தமான இரு வேறு இடங்களில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை தங்களது பெயருக்கு பத்திரப்பதிவும் செய்து விட்டாராம்.. போச்சம்பள்ளி சார்பதிவாளர் அலுவலகத்தில் இந்த பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலி வாரிசு சான்றிதழ்
உயிருடன் இருக்கும் தன்னை இறந்துவிட்டதாக கூறி, தனது நிலத்தை மற்றவர்கள் அபகரித்ததை அறிந்த கோவிந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனிலும், சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்திருக்கிறார். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் தலைமையில் விவசாயிகள், கோவிந்தியை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரை நேரில் சந்தித்தனர். அவரிடம் நிலத்தை மீட்டுத்தரக்கோரி புகார் மனுவும் அளித்தனர்.
ஒரு ஏக்கர் நிலம் போச்சே
இதுகுறித்து ராம கவுண்டர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சந்தம்பட்டியை சேர்ந்த மூதாட்டி கோவிந்தி இறந்துவிட்டதாக போலியான வாரிசு சான்றிதழ் பெற்று, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் நிலத்தை சிலர் அபகரித்துள்ளனர். நிலத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுக்கிறார்கள்.. அதனால் நிலத்தை அபகரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூதாட்டிக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தையும் மீட்டு அவருக்குத் தர வேண்டும். போலியான வாரிசு சான்றிதழ் மற்றும் பத்திரப்பதிவு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிருடன் இருக்கும் மூதாட்டியை இறந்துவிட்டதாக காட்டி, அவரது சொத்தையே வேறு நபர்கள் பெயருக்கு மாற்றியதாக எழுந்துள்ள இந்த புகார் சந்தம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!




Click it and Unblock the Notifications
