“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு திமுக வழியில் போகக்கூடாது” : இந்து முன்னணி கோரிக்கை!
திருப்பூர்: "முந்தைய திமுக அரசை போல், இந்து விரோத போக்கை தவெக அரசும் தொடராமல், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் பாதுஷா தர்கா அருகே உள்ள சர்ச்சைக்குரிய கல்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்திருந்தது. இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெறும் விசாரணையின்போது, மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சர்ச்சைக்குரிய கல்தூண் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட தீபத்தூண் அல்ல, ஆங்கிலேயர் காலத்தில் நில அளவீட்டுப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சர்வே தூண் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என ஐகோர்ட் மதுரை கிளை அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.
அங்கு நடந்த விசாரணையில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என குறிப்பிட்டுள்ளார். தீபத்துாண் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என உறுதிப்படுத்த, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்கறிஞர் தயக்கம் காட்டியுள்ளார். இவையெல்லாம் இந்துக்களுக்கு கடும் அதிர்ச்சியை தருகிறது.
இது தவிர, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி போராடிய இந்துக்களுக்கு அனுமதி மறுத்து கைது செய்த அரசு, மற்றொரு தரப்பினர் நடத்திய போராட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. போராட்டத்தில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் நபர் மீது நடவடிக்கை எடுக்காததும், பாரபட்சமான அணுகுமுறையாக உள்ளது.
முந்தைய திமுக அரசை போல், இந்து விரோத போக்கை தவெக அரசும் தொடராமல், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
