கொளத்தூர் இடைத்தேர்தலில் முக ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெறுவார்.. அடித்து சொன்ன மூத்த பத்திரிகையாளர்
சென்னை: கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் மு.க ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை என பத்திரிகையாளர் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் தவெக அவ்வளவு சுலபமாக வெற்றி பெறும் என நான் நம்பவில்லை.. என அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே காங்கிரஸ், முஸ்லீம் லீக்கை தவிர மற்ற கட்சிகள் தவெகவுக்கு உறுதியாக ஆதரவு தெரிவிக்குமா என கூற முடியாது. தவெகவுக்கும் பொதுத்தேர்தலில் இருந்த ஆதரவு அலை இப்போது இல்லை என்றே கூற முடியும். எனவே இனி நடைபெறும் இடைத்தேர்தல் பொதுத்தேர்தல் அளவுக்கு பரபரப்புடன் இருக்கும் என ரமேஷ் கூறினார்.

ஸ்டாலின் போட்டியிட்டால் வெற்றி பெறுவார்
கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மாரடைப்பால் இன்று உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியாகியுள்ளது. இதனால் ஏற்கனவே உள்ள 5 தொகுதிகளோடு கொளத்தூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. எனவே கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக என பேசப்படும் நிலையில், அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என பத்திரிகையாளர் ரமேஷ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
அவரது உடல்நிலை குறித்து கூட நீண்ட நாட்களாக பேசப்பட்டது. உடல்நிலை என்பது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்டது என்றாலும் கூட அவர் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் பொதுவெளியில் பகிராமல் இருப்பது சரியில்லை என ஒருவர் நீதிமன்றத்தை நாடக்கூடிய நிலை இருந்தது. தற்போது விஎஸ் பாபு உயிரிழந்ததாக வெளிவந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
தவெகவுக்கு ஆசிட் டெஸ்ட்
கொளத்தூர் தொகுதிக்கும் இனி இடைத்தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. ஏற்கனவே 5 தொகுதி இடத்தேர்தல் என்ற நிலையில் கூடுதலாக 6 தொகுதிக்கு இடைத்தேர்தல் என்பது தவெக அரசுக்கு ஒரு ஆசிட் டெஸ்டாகவே இருக்கும். தவெகவுக்கு ஏற்கனவே இருந்ததை விட ஒரு நம்பர் குறைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு என்பது ஏற்கனவே ஒரு நிச்சயமன்ற தன்மையில்தான் இருந்து வருகிறது.
தவெகவுக்கு உறுதியாக ஆதரவு கொடுப்போம் என்றால் காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சியின் ஆதரவு மட்டுமே. ஏனென்றால் விசிக கூட அவ்வப்போது மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதை பார்க்கலாம். தவெகவும் 118 என்ற மெஜாரிட்டியை எட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறது. இதற்கான வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.
ஸ்டாலின் வெற்றி பெறுவார்
குதிரை பேர குற்றச்சாட்டு என பல குற்றச்சாட்டுகள் தவெக மீது இருக்கிறது. ஆளுநர் மற்றும் போலீசில் ஆளும் கட்சிக்கு எதிராக புகார்கள் கூறப்பட்டு உள்ளன. அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் 6 தொகுதிகள் இடைத்தேர்தல் என்பது எதிர்க்கட்சிகளை விட தவெகவுக்கு தான் சோதனை. கொளத்தூர் தொகுதியில் விஎஸ் பாபுவின் மகன் நிறுத்தப்படலாம் என தெரிகிறது. அவர்கள் குடும்பத்தாருக்கு வாய்ப்பு கொடுத்தால் அனுதாபம் வரும் என நினைக்கலாம்.
திமுக தரப்பில் மீண்டும் ஸ்டாலின் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு தான் நிலவுகிறது. என்னை பொறுத்தவரை ஆழ்ந்து பரிசீலித்து தான் திமுக இந்த முடிவை எடுக்கும். என்னை பொறுத்தவரை ஸ்டாலின் மீண்டும் போட்டியிட்டால் வெற்றி பெற்றுவிடுவார் என்று தான் நினைக்கிறேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. கொளத்தூர் தொகுதி மக்கள் மு.க ஸ்டாலினை தோற்கடித்ததால் வருத்தம் தெரிவித்து பேசியிருந்ததை கூட காண முடிந்தது.
தவெக சுலபமாக வெற்றி பெற இயலாது
தவெக ஆதரவு அலை பொதுத்தேர்தலில் இருந்ததை போல இப்போது இல்லை என்றே என்னால் சொல்ல முடியும். நிச்சயமாக குறைகள் நிறைய இருக்கிறது. பிரசாரத்தில் தவெகவுக்கு எதிராக குறைகளை சொல்ல நிறைய இருக்கிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை பெரியதாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம், பாலியல் சம்பவங்கள் என நிறைய இருக்கிறது. எனவே பொதுத்தேர்தலுக்கு உரிய பரபரப்பு இருக்கும். தவெக அவ்வளவு சுலபமாக வெற்றி பெறும் என நான் நம்பவில்லை.. என்று கூறினார்.





Click it and Unblock the Notifications
