அமைச்சருக்கு தெரியும்? அன்பில் மகேஷுக்கு லாக்.. வசூல் பணம் எங்கே? முத்துக்குமாரிடம் துருவும் போலீஸ்!
சேலம்: ரூ.400 கோடி தனியார் பள்ளி அங்கீகார மோசடி வழக்கு சேலத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு 40.20 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் சேலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 1 நாள் போலீஸ் காவலில் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், அவரது கார் ஓட்டுநர் சரவணன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.400 கோடி மோசடி
ஏற்கனவே அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
முத்துக்குமார்
அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, நீதிமன்ற அனுமதியுடன் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் முத்துக்குமார், "நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி அலுவலகத்தில் எனக்கென ஒரு அறை மற்றும் அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அன்பில் மகேஷிடம் எனக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக தனியார் பள்ளி நிர்வாகிகள் எனது நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருந்தனர். இது அமைச்சருக்கு தெரியும்" என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
பள்ளி அங்கீகார மோசடி
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ஸ்ரீ கொங்கு மெட்ரிகுலேஷன் தமிழ்மணி என்பவர் 8.20 லட்சம் மற்றும் வித்தியாசாகர் மெட்ரிகுலேஷன் பள்ளி பிரகாஷ் 20 லட்சம் மற்றும் பேளூர் பெரியார் நர்சரி பள்ளி சங்கர் 12 லட்சம் என 40.20 லட்சம் ரூபாய் லஞ்சம் பள்ளி புதுப்பித்தல் மற்றும் தரம் உயர்த்துதல் பல்வேறு பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. முத்துக்குமாரிடம் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமார் சேலம் குற்றவியல் நீதிமன்றம் 6-ல் ஆஜர்படுத்தப்பட்டார்.
குற்றப்பிரிவு காவல்துறையினர்
அப்போது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் முத்துக்குமாரை 3 நாட்கள் காவல்துறை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என காவல்துறையினர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தனர். இதனை பரிசீலித்த நீதிமன்றம், முத்துக்குமாரை ஒரு நாட்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து, பணம் வசூலித்தது யார்? தனியார் பள்ளிகளிடமிருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? வசூலிக்கப்பட்ட பணம் யாரை சென்றடைந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.




Click it and Unblock the Notifications
