எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்ப்பு! இப்போது ஆளுங்கட்சியானதும் வழக்கு வாபஸ்! தவெகவின் திடீர் முடிவு
சென்னை: அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை நடத்துவதற்காக தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து முன்பு எதிர்க்கட்சியாக இருந்தபோது தமிழக வெற்றிக் கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கிடையே அந்த வழக்கை இப்போது திரும்ப பெறுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுவை திரும்ப பெற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, முந்தைய திமுக ஆட்சியில் தமிழக அரசு அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த நெறிமுறைகள் ஜனவரி மாதம் அரசிதழில் வெளியிடப்பட்டன. இதை எதிர்த்தும் அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக சார்பில் இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ரோடு ஷோ நடத்த அனுமதி கோரும் அரசியல் கட்சிகளில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என்றும் அவர் வாதிட்டிருந்தார்.
மேலும், வழிகாட்டு நெறிமுறைகளில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றதாக இருப்பதாகவும், இதனால் அரசியல் கட்சிகள் தங்களது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு ஏற்க வேண்டிய பொறுப்புகள் அனைத்தும் அரசியல் கட்சிகள் மீது சுமத்தப்படுவதாகவும், இந்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக தவெக அளித்த பரிந்துரைகள் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என்றும் நிர்மல் குமார் குற்றம்சாட்டியிருந்தார்.
எனவே, அந்த வழிகாட்டுதல்களை ரத்து செய்து அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்து புதிதாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனர். இதையடுத்து தவெக தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


Click it and Unblock the Notifications
