“மரங்களின் மாநாடு”.. அப்துல்கலாம், விவேக் படங்களுக்கு மரியாதை செலுத்தி மரக்கன்றுகள் நட்ட சீமான்!
சென்னை: திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரங்களின் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் நம்மாழ்வார், அப்துல்கலாம், விவேக் உள்ளிட்டோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, "மரங்களோடு பேசுவோம்! மரங்களுக்காகப் பேசுவோம்!" என்ற தலைப்பில், இன்று திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில் மரங்களின் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூலை 10 ஆம் தேதி அன்று "மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை" என்ற தலைப்பில் ஆடு மாடுகள் மாநாடு நடத்தினார். இந்த மாநாட்டில் கால்நடைகளின் மேய்ச்சல் உரிமை, இயற்கை விவசாயம், மற்றும் நவீன வேளாண்மையால் உள்ளூர் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி இருந்தார்.
அதற்கு முன்னதாக, பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார். பின்னர் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார் சீமான்.
ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து, இன்று மரங்களின் மாநாடு நடத்துகிறார் சீமான். திருத்தணி அருகே நடைபெற்று வரும் இந்த மாநாட்டில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையேற்றுளார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கூட்டுச்சாலை மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மரங்களின் மாநாடு தொடங்கியுள்ளது.
நாதகவின் மரங்கள் மாநாட்டில், மறைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் நம்மாழ்வார், மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், நகைச்சுவை நடிகர் விவேக் உட்பட பலரின் நினைவாக மரக் கன்றுகளை நட்டுள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். முன்னதாக அவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் சீமான்.












Click it and Unblock the Notifications