'பூமராங்..' அரசு பஸ் ஊழியர் ஸ்டிரைக்! 2017ல் ஸ்டாலின் கூறிய வார்த்தை! அப்படியே திருப்பி கேட்ட சீமான்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது 8 ஆண்டு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு x சோஷியல் மீடியா பதிவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சீமான் நினைவூட்டியுள்ளார்.
தமழ்நாடு: மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழக மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து வசதியை போக்குவரத்து கழகங்கள் வழங்கி வருகின்றன. கல்வி, வேலைவாய்ப்பு, கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான இணைப்பு என தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வாழ்வில் போக்குவரத்து கழகங்கள் மிக சிறப்பான் பங்களிப்பை செய்து வருகின்றன. ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

வேலை நிறுத்தம்: இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் அவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அரசு தரப்பில் பேச்சுவார்த்தையும் நடத்தப்பது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன. எனவே நேற்று நள்ளிரவு 12 மணி முதல் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன.
சேவை துறை: இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தனியார் பேருந்துகள் லாபத்தில் ஓடும்போது, போக்குவரத்து கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற தவறான கருத்து சிலரால் முன்வைக்கப்படுகின்றது. போக்குவரத்து கழகங்கள் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. இழப்பு ஏற்படும் என தெரிந்தே 10,000க்கும் மேற்பட்ட கிராமப்புற, மலை வழித்தடங்களில் சேவை நோக்கத்துடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2017ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி, நீங்கள் எந்தக் கருத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்தீர்களோ, அதே போன்றதொரு சூழலில், அதே கருத்தை, தற்போதைய… https://t.co/NxzvCq3TQK
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 9, 2024
மாணவர்கள், பெண்கள் என சமூகத்தின் பல பிரிவினருக்கு இலவச பேருந்து சேவை அளிக்கும் அரசின் திட்டம் போக்குவரத்து கழகங்களால் அமுல்படுத்தப்படுகிறது. இதனால் கழகங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடுகட்டுவது கிடையாது.
வரவு, செலவு: தமிழக மின்வாரியம், சிவில் சப்ளை கார்ப்பரேசன் போன்றவற்றிற்கு முழுமையான இழப்பை ஈடுகட்டும் அரசு, தினமும் 2 கோடி மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்து கழகங்களைப் புறக்கணிக்கின்றது. அவசரத் தேவைக்காக போக்குவரத்து கழகங்களுக்கு அவ்வப்போது அரசு வழங்கும் பணத்திற்குகூட வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே, போக்குவரத்து கழகங்களை சிறப்பாக செயல்படுத்த வரவுக்கும், செலவிற்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும்.
பற்றாக்குறை: கடந்த 2017ஆம் ஆண்டு 23,000 பேருந்துகள் இயங்கி கொண்டிருந்தது. இதே 2018ஆம் ஆண்டு பேருந்து எண்ணிக்கை 19,500ஆக குறைக்கப்பட்டது. 8 ஆண்டுகளாக பணி ஓய்வுபெற்ற, மரணமடைந்த தொழிலாளர்களுக்குப் பதிலாக, புதிய தொழிலாளர்கள் நியமிக்கப்படவில்லை. சுமார் 20.000 காலிப்பணியிடங்கள் உள்ளன. ஏற்கனவே பேருந்து எண்ணிக்கை குறைக்கப்பட்ட நிலையில் பணியாளர் பற்றாக்குறையால் தினமும் சுமார் 1500 பேருந்துகளை இயக்க முடியவில்லை. ஓட்டுமொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக மக்களின் பயண உரிமை மறைமுகமாக பறிக்கப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளனர்.
2017ம் ஆண்டு பதிவு: இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2017ம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பதிவிட்டிருந்த ட்வீட்டை மீண்டும் பதிவிட்டு,
சீமான்: "கடந்த 2017ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தையொட்டி, நீங்கள் எந்தக் கருத்தை வலியுறுத்தி அப்போதைய முதல்வருக்குக் கோரிக்கை வைத்தீர்களோ, அதே போன்றதொரு சூழலில், அதே கருத்தை, தற்போதைய முதல்வராக உள்ள தங்களுக்கு நினைவு படுத்த வழிமொழிகிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications