போலீஸ் பாவமில்லையா? 10+3+10 அதென்ன கணக்கு.. தமிழக அரசுக்கு பறந்த கண்டனம்! முக்கிய கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் நிலை உயர்த்துதல் தொடர்பான தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2021 சட்டமன்றத் தேர்தலின்போது காவல்துறையினருக்கான பதவி உயர்வு காலவரம்பு குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்ததால் தமிழ்நாடு காவல்துறையினர் மிகுந்த ஏமாற்றத்திலும், வேதனையிலும் இருந்து வந்தனர்.

இந்நிலையில் ஆட்சி முடிவுறும் தருவாயில் காவல்துறையினரின் அதிருப்தியைச் சமாளிக்கும் விதமாக, விருப்பமின்றியும், வேறு வழியின்றியும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது காவலர்கள் நிலை உயர்வுக்கான காலவரம்பினைக் குறைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள்.

Seeman Tamil Nadu Govt Police

அதன்படி, தமிழ்நாடு அரசு கடந்த 13.06.2025 அன்று வெளியிட்ட புதிய அரசாணையின்படி காவலர்களுக்கான நிலை உயர்த்துதலில் தற்போது உள்ள 10+5+10 பணி ஆண்டுகள் என்பதை மாற்றி, 10+3+10 பணி ஆண்டுகள் என நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு காவல்துறை பணியில் சேர்ந்து பத்தாண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலை காவலர்கள், முதல்நிலை காவலராகவும், அதன்பின் அடுத்த 3 ஆண்டுகள் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்த பிறகு ஏட்டாகவும், அடுத்த 10 ஆண்டுகள் ஏட்டாகப் பணிபுரிந்த பிறகு சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகவும் தரம் உயர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதை மாற்றி, 23 ஆண்டுகளாகக் (2 ஆண்டுகள்) குறைத்துள்ளது.

ஆனால், பதவி உயர்வு கால வரம்பானது 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று திமுக அரசு அவ்வரசாணையில் தெரிவித்துள்ளதால், 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்குப் பணிக்கால வரம்பு குறைப்பு பொருந்தாது என்பது அக்காலகட்டத்தில் பணியில் சேர்ந்த காவலர்களுக்கு திமுக அரசு செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

சட்டமன்றத்தேர்தலின்போது அளித்த வாக்குறுதியில் இப்படியான கட்டுப்பாடு எதுவும் விதிக்காதபோது, முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பிலும் அப்படியான நிபந்தனை எதுவும் இல்லாதபோது, தற்போது வெளியிடப்பட்ட அரசாணையில் மட்டும் 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சலுகை என்பது அப்பட்டமான ஏமாற்றாகும்.

வேளாண் நகைக்கடன் பெற்ற அனைவரின் கடன்களும் தள்ளுபடி செய்வோம் என்று கூறிவிட்டு பின் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தள்ளுபடி வழங்கியது, அனைத்துப் பெண்களுக்கும் உரிமைத்தொகை என்று உளறிவிட்டு பின் தகுதியுள்ள பெண்களுக்கு மட்டுமே என்று பல இலட்சம் பெண்களை தவிர்த்து ஏமாற்றியது என திமுக அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் வரிசையில் தற்போது காவலர்களுக்கான பதவி உயர்வு காலவரம்பு குறைப்பு வாக்குறுதியும் இணைந்துள்ளது.

தேர்தல் நேரத்து வாக்குறுதியின்படி 5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் ஒரு காவலருக்குக்கூட திமுக அரசு பதவி உயர்வுக்கான காலவரம்பு குறைப்பு செய்யாததோடு, அதனை 2011க்குப் பிறகு என்று குறிப்பிட்டு பத்தாண்டுகள் தள்ளிப்போட்டும் உள்ளதுதான் கொடுமையின் உச்சமாகும்.

ஏற்கனவே 2011ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்து, 5 ஆண்டுகள் முதல்நிலை காவலராகப் பணிபுரிந்துவிட்ட காவலர்களுக்கு, தமிழ்நாடு அரசு வழங்கும் 2 ஆண்டு காலவரம்பு குறைப்பு சலுகையை ஏட்டாகப் பணிபுரியும் காலத்தில் வழங்கலாமே? உண்மையிலேயே திமுக அரசிற்கு காவலர்களுக்கு பதவி உயர்வில் கால வரம்பு சலுகை வழங்க வேண்டும் என்ற அக்கறை இருந்தால் காவலராகப் பணியில் சேர்ந்து தற்போது 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்குவதே முறையானதும், சரியானதுமாகும்.

ஆகவே, இரவு பகல் பாராது, கடும் மழை, கொடும் வெயில் பாராது அர்ப்பணிப்புணர்வுடன் 23 ஆண்டுகள் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்துள்ள காவலர்கள் அனைவருக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். அதன்படி, தமிழ்நாடு அரசு 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு என்ற கட்டுப்பாடு விதித்து வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப்பெற்று, புதிய அரசாணையை வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+