"ஐயா ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற வேண்டும்.. உளமார வாழ்த்துகிறேன்".. சீமான் உருக்கம்
ரஜினிகாந்த்துக்கு சீமான் வாழ்த்து பதிவிட்டுள்ளார்
சென்னை: "ஐயா ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்!" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியலுக்கு வருவதற்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருவது சீமான்தான்.. இதற்கு காரணம் அவர் மீது தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு கிடையாது.. தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்ற சிம்பிள் லாஜிக்தான்!!
ஒவ்வொரு முறையும், ரஜினி அரசியல் வருகை என்றாலே டென்ஷன் ஆகிவிடுவார் சீமான்... இதுகுறித்து எத்தனையோ முறை பலவாறான விமர்சனங்களையும், கருத்துக்களையும் தனக்கே உரித்தான பாணியில் நாம் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான்
எனினும், சில தனிப்பட்ட நிகழ்வுகளில் ரஜினியும் சரி, சீமானும் சரி எந்தவித காழ்ப்புணர்ச்சியையும் காட்டி கொள்வதில்லை.. ஒரு நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது, "ரஜினிகாந்த்துடன் நாம் முரண்படறோம் என்றால் அது அரசியலோட சரி.. அவரோட கருத்தோட மட்டும்தான்... மற்றபடி ரஜினிகாந்த் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு.. அவர் படங்களை ரசிப்பேன்.

கையெழுத்து
என் கல்யாணத்துக்குகூட, அவர் தன் கைப்பட வாழ்த்து எழுதி "ரஜினிகாந்த்"-ன்னு கையெழுத்து போட்டு தந்தார், அது இன்னமும் என்கிட்ட இருக்கு. அவர் மேல மதிப்பு உண்டு, ஆனால், அவர் மண்ணில், மராட்டியத்தில், கர்நாடகத்தில் போய் கட்சி ஆரம்பித்தால், அவரை வாழ்த்தி நான் போய் பேசுவேன். அப்படி வாழ்த்தும்போது என்னை மாதிரி யாரும் பேச முடியாது. ஆனால், என் நிலத்தில் மானத்தமிழ் மண்ணை ஆள மராட்டியர் நினைப்பது மிகப்பெரிய தவறு" என்று கூறியிருந்தார்.

சீமான்
அதேபோல ரஜினியும் சரி, சீமான் எவ்வளவு விமர்சித்தாலும் இதுவரை ஒருவார்த்தைகூட அவரை கடிந்து பேசியதே கிடையாது.. மறைமுகமாககூட சீமானுக்கு எதிராக பேசியது கிடையாது.. 2 மாசத்துக்கு முன்னாடிகூட, சீமானுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. வடபழனியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, வீடு திரும்பிய நிலையில், சீமானுக்கு ரஜினி போன் செய்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்.

உடல்நிலை
வழக்கமாகவே ரஜினி எல்லாருடைய உடல்நலனிலும் அக்கறை காட்டுபவர்.... சீமானிடம் உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுமாறு அப்போது அறிவுறுத்தி இருந்தார்.. இந்நிலையில், தற்போது ரஜினி ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் ரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.. விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
|
ட்வீட்
ரஜினி பூரண குணமடைய பல்வேறு தலைவர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.. அந்த வகையில் நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்வீட்டில், "சிறந்த திரைக்கலைஞரான ஐயா ரஜினிகாந்த் @rajinikanth அவர்கள் உடல்நலிவுற்றுள்ள செய்தியறிந்து மிகவும் மனம் வருந்துகிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று மீண்டுவர உளமார வாழ்த்துகிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications