இஸ்லாமியர்களுக்காக ராஜ்கிரண் போராடினாரா?.. என் வலி தெரியுமா? .. ஓட்டு போடுவார்களா? சீமான் கொதிப்பு
சென்னை: இஸ்லாமியர்களுக்காக ராஜ்கிரண் போராடியிருக்கிறாரா?என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நான் மன்னிப்பு கேட்டால் இஸ்லாமியர்கள் எனக்கு ஓட்டு போடுவார்களா என்று கேட்டுள்ள சீமான், ராஜ்கிரணுக்கு என்னை திட்டுவதற்கும் கோபப்படுவதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது என்றும் சீமான் கூறியுள்ளார்.
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும் இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான் என்று கூறினார் சீமான்.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியது. ஜவாஹிருல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசும் பொழுது கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் இழிவாகப் பேசியிருப்பதும் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்கள் மீது அமிலம் வீசுமாறு வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியிருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. சாத்தானின் பிள்ளைகள் என்ற கடுமையான, அருவருப்பான வார்த்தையை கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பயன்படுத்தி உள்ள சீமான் இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார் ஜவாஹிருல்லா.
இதே போல நடிகர் ராஜ்கிரணின் முகநூல் பதிவும் அதிகம் பகிரப்பட்டது. அதில் "இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளைப் பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...
இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்., பொறுமை காக்க வேண்டும் என்று, இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" என்று ராஜ்கிரண் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் தரும் வகையில் பேசியுள்ள சீமான், நான் மன்னிப்பு கேட்க வேண்டுமா? ஏன் கேட்க வேண்டும் என்று கேட்டார்.
வருத்தம் தெரிவிக்க வேண்டியது என் மக்கள்தான். தொண்டை வலிக்க கத்த வைத்தது யார். அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மார்க்கமும் சமயமும்தான். அநீதிக்கு எதிராக போராடவில்லை. பழனி பாபாதான் அநீதிக்கு எதிராக போராடியவர் அவரையே நீங்கள் மதிக்கவில்லையே. அவர் திமுகவை எதிர்த்தவர் அதனால் யாரும் பேசுவதில்லை. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவாரா என்று கேட்டார். மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா?
ஜவாகிருல்லா கருணாநிதியை துரோகி என்று சொன்னவர். இன்றைக்கு அவருக்கு பக்கத்தில் போய் நிற்கின்றனர். எனக்கு வலி இருக்கிறது ஆதங்கம் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் செய்திருக்கலாம் ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் இதை செய்திருக்க கூடாது என்று சீமான் சொன்னார். காங்கிரஸ் கட்சி செய்த ஒரு நல்லதை செய்யச்சொல்லுங்கள் பார்க்கலாம். பாபர் மசூதியை இடிக்க கரசேவைகாரர்களுக்கு அனுமதி கொடுத்தது யார் என்றும் சீமான் கேட்டார். காங்கிரஸ் கட்சியும் கூட்டு களவாணிதான் என்று குற்றம் சாட்டினார்.
இந்து என்று பாஜக சத்தமாக கத்தினால் நாங்கள் இந்துதான் என்று காங்கிரஸ் கட்சியினர் சொல்வார்கள். பிராமணர் என்றும் சொல்வார்கள். என் இன மக்களை அழித்தது காங்கிரஸ் கட்சி, அதற்கு துணை போனது திமுக அதை மறந்து கடந்து போக முடியுமா?. அவர்களுக்கு ஓட்டு போடுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் சீமான் கேட்டார். கச்சத்தீவு மீட்பு நிலைப்பாடு என்ன? என்எல்சி விவகாரத்தில் திமுக சொன்னது என்ன செய்வது என்ன? எனக்கு எப்போது ஓட்டு போட்டீர்கள்.
காங்கிரஸ்தான் பிரச்சினைக்கு விதை போட்டது. அதை பாஜக வளர்க்கிறது. செந்தில்பாலாஜிக்கு என்றால் மட்டும் திமுக போராடுகிறது. நடிகர் ராஜ்கிரண் செய்துள்ள விமர்சனத்திற்கு பதில் சொன்ன சீமான், அவர் ரொம்ப பெரியவர். என் வலி அவருக்கு இருக்கிறதா? அவர் எதற்காக போராடினார். அவர் பெரியவர். முழு பேச்சையும் கேட்க வேண்டும். அண்ணன் என்னை திட்டுவதற்கு முழு உரிமை இருக்கிறது பேசி விட்டு போகட்டும் என்றும் சீமான் சொன்னார்.












Click it and Unblock the Notifications