ஸ்டாலின் அடைந்த தோல்வி.. கொளத்தூர் தொகுதியை இழக்கும் சேகர்பாபு.. அடித்து ஆடிய திமுக தலைமை!
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைந்த நிலையில், அந்த தொகுதிக்கான பொறுப்பை சேகர்பாபு இழந்துள்ளார். சென்னையை திமுக 10 மாவட்டங்களாக பிரித்துள்ள சூழலில், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர்பாபு வசம் துறைமுகம், திரு விக நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகளின் கட்டுப்பாடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.
சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் தோல்வி அடைந்தார். திமுக அடைந்த தோல்வியை விடவும் ஸ்டாலின் அடைந்த தோல்வி திமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் கொளத்தூர் மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவிக்க அடுத்த நாளே சென்றார்.

அப்போது உடனிருந்த சேகர்பாபு கண்ணீருடன் இருந்தார். அங்கிருந்த திமுகவினர் பலரும் ஸ்டாலினின் செயல்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினர். இதனைத் தொடர்ந்து திமுகவில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதன்படி திமுகவில் அமைப்பு ரீதியாக 110 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த வகையில் 110 மாவட்டங்களை பிரித்து ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் மட்டும் திமுகவில் 10 மாவட்டங்களாக பிரித்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக மக்கள் தொகை கொண்ட சோழிங்கநல்லூர் மட்டும் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இதில் சேகர்பாபு வசம் இருந்த கொளத்தூர் தொகுதியின் கட்டுப்பாடு பறிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரான சேகர்பாபு வசம் துறைமுகம், திரு விக நகர், வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர், எழும்பூர் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட சேகர்பாபு மட்டும் தான் வெற்றி பெற்றார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்ததால், சேகர்பாபு வசமிருந்த அந்த தொகுதி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புதிதாக பிரிக்கப்பட்டுள்ள சேகர்பாபுவின் சென்னை கிழக்கு மாவட்டத்தில் துறைமுகம், திரு விக நகர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 3 தொகுதிகள் மட்டுமே இருக்கிறது. அதேபோல் பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய தொகுதிகள் ஒரே மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய்யின் பெரம்பூர் மற்றும் ஸ்டாலினின் கொளத்தூர் ஆகிய தொகுதிகளை எந்த மாவட்டச் செயலாளர் வசம் அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
