ஸ்டார்மிங் ஆபரேஷன்: அப்படியே "அம்மா" மாதிரியே நடந்துகிறாருங்க ஸ்டாலினு.. செல்லூராரின் ஆஹா புகழ்ச்சி
சென்னை: ரவுடிகளை அடக்கி ஒடுக்குவதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போலவே தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தென் தமிழகத்தில் நடைபெறும் தொடர் கொலையை தடுக்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் நெல்லையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் உள்ள ரவுடிகளை ஸ்டார்மிங் ஆபரேஷன் மூலம் கண்டறிந்து அவர்களை கைது செய்து ரவுடித்தனத்தை தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு ஆணையிட்டுள்ளார்.
அதன்பேரில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த ரவுடிகள் தேடுதல் வேட்டையின் போது 3325 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதிலும் கூலிப்படையினரை ஒழிக்கும் நோக்கமே இந்த ஸ்டார்மிங் ஆபரேஷனில் பிரதானமாக உள்ளது. தென் தமிழகமான திண்டுக்கல்லில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

பயங்கர ஆயுதங்கள்
ஒரு மாநிலம் அமைதி பூங்காவாக இருக்கிறதா என்பதை அறிய அந்த மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டே தமிழக காவல் துறை ரவுடிகளை ஒடுக்கும் விவகாரத்தில் வேகம் காட்டி வருகிறது. இந்த ரெய்டின் போது கைத்துப்பாக்கிகள், அரிவாள்கள், பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

செல்லூர் ராஜூ
இந்த நிலையில் இந்த சம்பவத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டியுள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து மனு கொடுத்த செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஏற்கெனவே கடந்த ஆட்சி காலங்களில் கொடுக்கப்பட்ட டெண்டர்களை ரத்து செய்துவிட்டார்கள். அந்த டெண்டர்களில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை. எனவே அந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ரவுடிகளை அடக்கி ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அது போல் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும் ரவுடிகளை ஒடுக்க முயற்சி எடுத்துள்ளார். அது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார். அது போல் சட்டம் ஒழுங்கு குறித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுக தலைமையின் கருத்துக்கு நேர் மாறாக செல்லூர் ராஜூ, திமுக அரசை பாராட்டியுள்ளது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே உள்ள ஒற்றுமையில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முன்னாள் அமைச்சர்கள்
செல்லூர் ராஜூ மட்டும் இதற்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டியுள்ளார்கள். மறைந்த அதிமுக அவை தலைவர் மதுசூதனன் மறைந்த போது நேரில் போய் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் கட்சி பேதமின்றி ஈபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறியதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டியிருந்தார். தமிழருக்கே உரிய பண்பாடு நல்லது கெட்டதில் பாகுபாடு காட்டாமல் கலந்து கொள்வதுதான். அதனடிப்படையில் முதல்வர் அவர்கள் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளார் என ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.

பேட்டி
ராஜேந்திர பாலாஜி ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் கடுமையாக உழைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள். மு.க.ஸ்டாலினோட உழைப்பை குறை சொல்லவே முடியாது. அவரோட ஆரம்பமே அருமையா இருக்கு என்றார். ஆர் பி உதயகுமார் , கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத்தொகை வட்டியோடு கொடுக்கப்படுவது சந்தோசம் அளிக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திமுக அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் என்றார். முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக திமுக அரசு அதிரடி காட்டி வரும் நிலையில் அரசிடம் இருந்து ஏதேனும் அனுசரணையை இவர்கள் எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் அதே வேளையில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், உதயகுமார் உள்ளிட்டோர் சில சமயங்களில் காட்டமாகவும் பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications