செல்லூர் ராஜூக்கு வந்த "குபீர்" யோசனை.. பேசாமல் இந்த தக்காளியை, தெருத்தெருவாக கொண்டுபோய் விற்றால்?
சென்னை: தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வரும்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர ராஜூ, தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளார்.
தக்காளியின் வரத்து குறைவு மற்றும் காலநிலை உள்ளிட்ட காரணங்களினால் தக்காளி விலையானது, தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தக்காளி விலை எகிற ஆரம்பித்தது.. கிலோ ரூ.120, 140 வரை உயர்ந்தது..

விலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டது.. முதல் கட்டமாக 67 பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்பட்டது.
உயர்ந்த தக்காளி விலை: பிறகு, 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட்டது.. இதனிடையே, நேற்றைய தினம், தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை ஆரம்பமானது.. மேலும், அமுதம், காமதேனு அங்காடிகளிலும் தக்காளி விற்பனை ஆனது..
இதனால், ரேஷன் கடைகள், அங்காடிகளில் பொதுமக்கள் முண்டியத்தும், நீண்ட வரிசையில் காத்திருந்தும் தக்காளி வாங்கினர்.. எனினும், முதலில் வரும் 50 அல்லது 100 பேருக்கு மட்டுமே குறைந்த விலையி்ல் தக்காளி கிடைக்கும் நிலை உள்ளதால், பலபேர் ஏமாந்து திரும்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.
முக்கிய கோரிக்கை: அதிகாலையிலேயே க்யூவில் நிற்க வேண்டியதாயிருப்பதால், தங்கள் குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்ப முடியாமல், தாய்மார்கள் திணறுகிறார்கள்.. அதனால், கூடுதல் ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான செல்லூர் ராஜு, திமுக அரசை சரமாரியாக விமர்சித்துள்ளார். அத்துடன் தக்காளியை விற்பதில், யோசனை ஒன்றையும் தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளார்.
தக்காளி விலை: செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, "ஸ்டாலினுக்கு நிர்வாகத்திறமையே கிடையாதுங்க.. தக்காளி விலை ஏறிப்போயிடுச்சே.. இவ்ளோ ஏற விடவே கூடாதே.. ரேஷன் கடையில் தக்காளி தர்றாங்களாமே.. தக்காளி, காய்கறிகளை எல்லாம், ரேஷன் கடையில் தரக்கூடாது. நடமாடும் காய்கறிகள் போல வைத்து, தெருவுல கொண்டுபோய் விற்கணும்..
அப்பதானே மக்கள் வந்து வாங்குவாங்க.. எல்லாருக்கும் கிடைக்கும்.. குறைந்த விலையில் கிடைக்கும்.. ஸ்டாலினுக்கு அடிப்படையே தெரியலையே.. விலைவாசி பற்றியெல்லாம் கவலைப்படாமல், கமிஷன், கரப்ஷன் எப்படி வரும்னு தான் பார்க்கறாரு" என்றார் செல்லூர் ராஜூ.












Click it and Unblock the Notifications