தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம்தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? செல்வப்பெருந்தகை உருக்கம்
சென்னை: தமிழகத்தில் இன்னும் எத்தனை காலம் தான் பிறரை சார்ந்திருக்க போகிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், தமிழகத்தில் எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்க போகிறோம்? சுயமாக நாம் வளர வேண்டாமா? பிற கட்சிகளை சாராத நிலை வேண்டும் என்றால் அதற்கு தொண்டர்கள்தான் பதிலளிக்க வேண்டும்.
அனைத்து மக்களையும் அரவணைக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். எந்த திசையில் செல்ல போகிறோம் என்பதை தொண்டர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு 9லும் வென்றது.
திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, நெல்லை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது. இந்த 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் அவர்களுக்கானது இல்லை, அவையெல்லாம் கூட்டணி கட்சிகளுடையது என செல்வப்பெருந்தகை விமர்சித்திருந்தார்.
அது போல் கடந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுகவுடன் பயணித்து 4 இடங்களில் வென்றதாகவும் பாஜக மீது காங்கிரஸ் விமர்சனம் செய்தது. அது போல் தமிழகத்தில் 9 லோக்சபா தேர்தலிலும் காங்கிரஸ் வென்றது, திமுகவின் வாக்குகளால்தான் என பாஜகவும் பதிலுக்கு விமர்சித்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்துள்ளது. அது போல் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி பறிபோனது. இதனால் காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் என பாஜகவினர் விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமையும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கூறிவருகிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி என்பது குறித்து பேச முடியாத நிலையில் அக்கட்சி உள்ளதாகவே பாஜக தெரிவிக்கிறது. ஒவ்வொரு முறை தேர்தலிலும் திமுகவிடம் கேட்பது ஒன்று கிடைப்பது ஒன்றாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் மனவேதனையில் உள்ளனர்.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் கூட காங்கிரஸ் ஆட்சி வந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில் அதை பற்றி கூட பேசுவது கிடையாது என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதோ அல்லது அதன் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதோ இருந்தால் கட்சி வலுவாக இருக்க வேண்டும். அடிமட்டத்திலிருந்து கட்சி வளர வேண்டும்.
இதற்கு தொண்டர்கள் வலுவாக இருக்க வேண்டும். இதைத்தான் செல்வப்பெருந்தகை இன்று வெளிப்படுத்தியுள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு செல்வப்பெருந்தகை தற்போது பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி இருந்த போதும் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழும் வகையில் சிறிய மோதல் போக்கு ஏற்பட்டது. அது போல் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக- காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.












Click it and Unblock the Notifications