கேம் ஓவர்.. பதவி விலகிய செல்வப் பெருந்தகை? அடுத்த காங்கிரஸ் தலைவர் யார்? முட்டி மோதும் தலைகள்!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், கட்சிக்குள் நீண்ட நாட்களாக நிலவி வந்த அதிருப்தி, தேர்தல் தோல்வி மற்றும் கூட்டணியில் ஏற்பட்ட மாற்றங்கள் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த காங்கிரஸ், தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த மாற்றம் மாநில காங்கிரஸ் தலைமைக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், திடீரென புதிய அரசியல் கூட்டணியை ஏற்க வேண்டிய சூழல் உருவானது.
செல்வப்பெருந்தகை
கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று செயல்பட்டாலும், மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில், தேர்தலின் போது வேட்பாளர் தேர்வும் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தொகுதிகளில் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் மாவட்ட நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
ஜோதிமணி
சில வேட்பாளர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் மாநிலத் தலைவர் என்ற முறையில் செல்வப்பெருந்தகையின் பெயரும் அடிபட்டது. இதுதொடர்பாக கட்சியின் மூத்த தலைவர்களிடமிருந்தும், முன்னாள் எம்.பி. ஜோதிமணியிடமிருந்தும் விமர்சனங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மேலிடம்
இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்கவில்லை. டெல்லி மேலிடத்துக்கும் பல்வேறு புகார்கள் சென்றதாக கூறப்படும் நிலையில், கட்சிக்குள் உருவான அழுத்தம் காரணமாக ராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இந்த சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக யார் வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது மூன்று முக்கிய பெயர்கள் கட்சிக்குள் அதிகமாக பேசப்படுகின்றன.
இளம் தலைமுறை
அதில் முதலாவதாக முன்னாள் எம்.பி. ஜோதிமணியின் பெயர் அடிபடுகிறது. இளம் தலைமுறையினரிடையே அறிமுகம் பெற்ற முகமாக இருக்கும் அவர், சமூக வலைதளங்களிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையிலும் அவரது பெயர் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாணிக்கம் தாகூர்
இரண்டாவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் பெயர் பேசப்படுகிறது. தமிழக அரசியல் சூழலை நன்கு அறிந்தவராகவும், டெல்லி மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் அவர் பார்க்கப்படுகிறார். திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக பேசியவர் என்பதால், தற்போதைய சூழலில் அவருக்கு வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.
பிரவீன் சக்கரவர்த்தி
மூன்றாவதாக அரசியல் வியூக நிபுணராக அறியப்படும் பிரவீன் சக்கரவர்த்தியின் பெயர் அடிபடுகிறது. தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையுடன் நெருக்கமாக செயல்பட்டு வரும் அவர், தமிழக அரசியலில் புதிய தலைமுறையை முன்னிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறார். குறிப்பாக, தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தை ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தவர்களில் ஒருவராக அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தவெக
தற்போதைய அரசியல் சூழலில் காங்கிரஸ் கட்சியும் இளைஞர்களை நோக்கி நகரும் அறிகுறிகள் தென்படுகின்றன. தவெக உருவாக்கிய தாக்கம், இளைஞர்களின் பங்கு ஆகியவை காங்கிரஸிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால்,டெல்லி மேலிடம் இறுதியாக யாரை தேர்வு செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications