மன நிறைவா இருக்கோம்.. ராஜ்யசபா வேட்பாளர் யார்? செல்வப்பெருந்தகை ரியாக்ஷன்
சென்னை: திமுக காங்கிரஸ் இடையே இன்று தொகுதி பங்கீடு உறுதியான நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மனநிறைவோடு இருக்கிறோம் என்று கூறினார். தொகுதி பங்கீட்டில் எந்த தாமதமும் இல்லை, சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்து இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்டதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாகவே நீண்டு கொண்டே சென்றது.

ப சிதம்பரம் பேச்சுவார்த்தை
இந்த நிலையில் நேற்று ப சிதம்பரம் சென்னையில் மு.க ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகே திமுகவு இறங்கி வந்தது. அதேபோல் காங்கிரசும் இறங்கி வந்தது. 41 தொகுதிகளை கேட்ட காங்கிரஸ் 36 என குறைத்தது. 25 தான் என்று சொன்ன திமுகவும் நேற்று 29 என்ற அளவுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
உறுதியான கூட்டணி
பின்னர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முத்லவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதனையடுத்து தான் ப சிதம்பரமும் டெல்லி தலைமையிடம் எடுத்து கூறியிருக்கிறார். விஜய்யுடன் போனால் வெற்றி பெற முடியாது.
திமுக கூட்டணி இந்த முறை பலமாக உள்ளது. வெற்றி பெற முடியும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தான் காங்கிரசும் இறங்கி வந்திருக்கிறது. இந்த நிலையில் உறுதியாக 28 + 2 அல்லது 29 + 1 என்று முடிவுக்கு வந்ததாக சொல்லப்பட்டது.
28 +1 என ஒதுக்கீடு
இதையடுத்து தான் இன்று மாலையில் திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் சென்னை அண்ணா அறிவாலயம் வந்தனர். முதல்வர் ஸ்டாலின், கனிமொழி, கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மன நிறைவோடு இருக்கிறோம்
பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 + 1 என தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை மனநிறைவோடு இருக்கிறோம் என்று கூறினார். அவர் பேசுகையில், "காங்கிரசுக்கு இந்த முறை 28 சட்டமன்ற தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜ்ய சபா வேட்பாளர் யார் என்பதை பின்னர் அகில இந்திய தலைமை அறிவிக்கும். கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த தாமதமும் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் சரியாக நடந்திருக்கிறது. நாங்கள் மனநிறைவோடு இருக்கிறோம்' என்று கூறினார்.
இதன் மூலமாக நீண்ட நாட்களாக ஏற்பட்டு வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. தவெகவுடன் கூட்டணி வைக்க ராகுல் காந்தி விருப்பப்பட்டதாகவும் ஆனால் சோனியா காந்தி ஸ்டாலினுடன் கூட்டணி வைக்கவே விரும்பியதும், மேலும் விஜய்யுடன் கூட்டணிக்கு சென்றால் தமிழக காங்கிரசில் பிளவு ஏற்படும் என்பதால் காங்கிரஸ் இறங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.
எப்படி பார்த்தாலும் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என கூவி கூவி அழைத்த விஜய்யுடன் யாருமே செல்லவில்லை.. தனித்து விடப்பட்டுள்ளார் என்பதே நிதர்சனம்!












Click it and Unblock the Notifications