ஸ்டாலினுக்கு போன் அடித்த ராகுல்.. அப்ப எல்லாமே தப்பா.. செல்வப்பெருந்தகை அப்டேட்
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆனாலும் ராகுல் காந்தி - மு.க. ஸ்டாலின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து சொல்லவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ராகுலும், ஸ்டாலினும் போனில் பேசியுள்ளதாகவும், புதுச்சேரி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார் [Selvaperunthagai].
சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனை நடத்தினார்கள். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக், கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டில் இழுபறிக்கு பிறகு திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.

ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்னார்
ஆனாலும் புதுச்சேரி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது. புதுச்சேரி கூட்டணிக்கு திமுக தான் தலைமை வகிக்கும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதனால் பரபரப்பு நிலவுகிறது. தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலமே இருப்பதால் புதுச்சேரியிலும் கூட்டணியை வேகமாக உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் அரசியல் கட்சிகள் உள்ளனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, "தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகி வருகிறோம். கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி தான். நாங்கள் எல்லாம் சொல்லியுள்ளோமே. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் எங்கள் தலைவர் ராகுல் காந்தி போனில் பேசியுள்ளார். உங்களுக்கு தகவல் வரவில்லையா. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி போன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை
எல்லோரும் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்கிறார்கள். அது தவறு. எப்போதுமே கூட்டணி அமைந்தவுடன் மகிழ்ச்சியாகதான் இருப்பார்கள்.அதை வெளியில் தான் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எப்போதுமே புதுச்சேரி கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை. அதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழ்நாட்டில் அமையும் கூட்டணிக்கு திமுக தலைமை வகிக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications