செமி ஹை ஸ்பீடு ரயில்! சென்னை டூ விழுப்புரம் உள்பட 3 ரூட்.. பயணிகளுக்கு நற்செய்தி.. லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை: சென்னை - விழுப்புரம், சென்னை - வேலூர் உட்பட 3 வழித்தடங்களில், 'செமி ஹை ஸ்பீடு ரயில்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சாத்தியக்கூறு அறிக்கையில் கிடைக்கும் முடிவுகளை பொறுத்து செமி ஹை ஸ்பீடு ரயில்களுக்கான அடுத்தக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழகம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காக இருப்பது உள்கட்டமைப்புதான். குறிப்பாக எந்த ஒரு நகரமும் வளர்ச்சி அடைவதற்கு முக்கியமானதாக இருப்பது போக்குவரத்துதான். இதனால் போக்குவரத்து உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவத்தில் தமிழக அரசு அதீத கவனம் செலுத்தி வருகிறது.

3 வழித்தடத்தில் செயல்படுத்தப்படுகிறது
இந்த நிலையில்தான், மத்திய அரசின் பங்களிப்போடு, 'செமி ஹை ஸ்பீடு' ரயில் திட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூலமாக செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, சென்னை செங்கல்பட்டு - திண்டிவனம் - விழுப்புரம் வரையில் 170 கிலோ மீட்டர் தூரத்திற்கும், சென்னை காஞ்சிபுரம் - வேலூர் வரையில் 140 கிலோ மீட்டர் தூரத்திற்கும், கோவை திருப்பூர், ஈரோடு, சேலம் வரையில் 185 கிலோ மீட்டர் தூரத்திற்கும் என 3 வழித்தடத்தில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது.
தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம்
இதற்கான, சாத்திய கூறு ஆய்வுகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் டெண்டர் வெளியிட்டது. இதற்காக விண்ணப்பித்த நிறுவனங்களில் பாலாஜி ரெயில் ரோடு சிஸ்டம்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். வழித்தடங்கள் தரையில் இயங்க வேண்டுமா? மேம்பால பாதையா? அல்லது சுரங்கப்பாதையில் இயங்க வேண்டுமா? நிலத் தேவைகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தோராயமான திட்டச் செலவு ஆகியவை ஆய்வு செய்யப்படும். இந்த வழித்தடங்களில் அதிவேகத்தில் ரயில் போக்குவரத்துக்கான சூழல், மக்களுக்கான தேவைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.
பயணிகளுக்கு வரப்பிரசாதம்
இந்த தகவலானது மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செமி ஹை ஸ்பீடு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் பயணிகளுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். சென்னை- செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம் வழித்தடம் என்பது சென்னையின் நுழைவு வாயில் போன்றதாக உள்ளது.
இந்த வழித்தடத்தில் தற்போது சாலை மார்க்கமாக பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதுவதை பார்க்க முடியும். அதேபோல, காஞ்சிபுரம், வேலூர் மார்க்கமும் மிக முக்கியமான ரூட் ஆக உள்ளது. சென்னையில் இருந்து தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வழித்தடத்தில் வந்து செல்கிறார்கள். எனவே, செமி ஹை ஸ்பீடு ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தால் பயணிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
எவ்வளவு வேகத்தில் இயக்கப்படும்?
தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட நிலையில், தற்போது இதற்கான பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த செமி ஹைஸ்பீடு ரயிலை பொறுத்தவரை மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும். அதிக அளவிலான பயணிகள் செல்லும் வழித்தடம் என்பதால் இந்த ரூட்டில் செமி ஹை ஸ்பீடு ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும் என்பதும் அத்துறை வல்லுனர்கள் கூறிய கருத்தாக இருந்தது.












Click it and Unblock the Notifications