செங்கோட்டையன் - எடப்பாடி விவகாரம்.. ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், செங்கோட்டையன் - எடப்பாடி விவகாரம் குறித்து தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
அத்திக்கடவு - அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில் பாராட்டு விழா பிப்ரவரி 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிமுகவில் பலரும் கலந்துகொண்ட நிலையில் மூத்த தலைவரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து செங்கோட்டையன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை. எங்களை வளர்த்த தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவின் புகைப்படங்களை இல்லாததால், அந்த விழாவில் பங்கேற்பதை புறக்கணித்தேன். இத்திட்டத்துக்கு ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு நிதி ஒதுக்கினார் என்று செங்கோட்டையன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அதிமுக கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் தொடர்பான பாராட்டு விழாவை விவசாயிகள் கூட்டமைப்புதான் ஏற்பாடு செய்தது. அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வைக்கப்படவில்லை. இதை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை. நாங்கள் எப்போதுமே அவர்கள் புகைப்படத்தை புறக்கணித்தது இல்லை. இதனை அவர் உணர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.
இதுகுறித்து, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளதாவது: அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி தேமுதிக சார்பில் எனது கருத்துகளைக் கூற விரும்பவில்லை. இது அவர்களுடைய கருத்து. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய கருத்தை கூறுகிறார். இதில் உண்மை பொய்யை அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும்.தேமுதிகவுக்கு இதில் எந்த பதிலும் இல்லை.
2026 சட்டப் பேரவைத் தேர்தல் ரொம்ப ஹாட்டாக இருக்கும். எங்களுடைய கூட்டணி சக்சஸான ஆண்டாக இருக்கும். 2026 இல் நிச்சயமாக தேமுதிக இருக்கும். எங்கள் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று மக்களாட்சி மற்றும் கேப்டனின் கனவு, லட்சியத்தை மீட்டெடுப்போம். எப்போதும் சொல்வது போல 234 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மருந்தகங்கள் வரவேற்கத்தக்கது. இதே திட்டத்தை மத்திய அரசு சார்பிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோதும் இதே திட்டம் இருந்தது. அதனைப் பின்பற்றி திமுகவும் தற்போது அறிவித்துள்ளது. ஆனால், இது மிகவும் காலதாமதம். இன்னும் இந்த ஆட்சி காலாவதியாக பத்து மாதங்கள் மட்டுமே உள்ளன.
பதவிக்கு வந்து இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது இந்த திட்டத்தை அறிவிக்கின்றன. தேர்தலுக்காகத்தான் இத்திட்டத்தை அறிவிக்கின்றனர். உண்மையிலேயே மக்களுக்கான திட்டமாக இருந்தால் வெற்றி பெற்று வந்த உடனேயே இத்திட்டத்தை அறிவித்திருக்க வேண்டும். இன்னும் பத்து மாதங்கள் தான் அடுத்த தேர்தலுக்கு உள்ள நிலையில் இப்போது வந்து இத்திட்டத்தை அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பு.
விஜய் அரசியலுக்கு எடுபடுவாரா இல்லை என்று நான் ஜோசியமாக சொல்ல முடியாது. அவருடைய அடுத்தகட்ட நடவடிக்கை செயல்பாட்டைப் பொறுத்துதான் அதனை முடிவு செய்ய முடியும் என்றார்.












Click it and Unblock the Notifications