தவெகவில் இணைந்தால் என்ன? ஜெயலலிதா படம் வைக்கக் கூடாதா? இது ஜனநாயக கட்சி! செங்கோட்டையன்
சென்னை: தவெகவில் இணைந்த போதிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டை பையில் வைத்திருந்தது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர். இதையடுத்து விஜய், அவருக்கு கட்சி துண்டை அணிவித்தார். மேலும் உறுப்பினர் அடையாள அட்டையையும் கொடுத்தார்.

இந்த நிகழ்வுக்கு பிறகு தவெகவில் இணைய காரணம் என்ன என்பது குறித்து செங்கோட்டையன் விளக்கினார். அவர் கூறுகையில், 1972 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கிய போது எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்டேன். தலைவருக்கு பின்னால் அணிவகுத்து நின்ற தொண்டர்களில் நானும் ஒருவன்.
அதிமுக தொடங்கிய போது
அதிமுக தொடங்கிய போது கோவை பொதுக் குழு ஏற்பாடுகளை செய்யும் முழு பொறுப்பையும் என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது நான் எம்ஜிஆரால் பாராட்டப்பட்டேன்.
எம்ஜிஆர் மறைந்த பிறகு
எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டபோது ஜெயலலிதா தலைமையில் பயணப்பட்டேன், சுற்றுப்பயணமாக இருந்தாலும் ஆலோசனை கேட்ட போதும் உடன் இருந்து பணியாற்றியுள்ளேன். ஜெயலலிதாவால் பலமுறை பாராட்டப்பட்டேன், ஆனால் இன்று இருக்கும் நிலை வேறு, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆட்சி நடத்தினோம். பல கூறுகளாக இயக்கம் பிரிந்தது. அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று தான் கருத்துகள் கூறினேன்.
அதிமுக பயணம்
என்னுடைய அதிமுக பயணத்தில் முதலில் எனது பொறுப்புகளை இருந்து எடுத்தார்கள். தேவர் ஜெயந்தி விழாவில் அதிமுக முன்னாள் நிர்வாகிகளை சந்தித்ததால் உறுப்பினர் பதவியையும் பறிக்கப்பட்டது. என்னுடையது மட்டுமல்ல எனது ஆதரவாளர்கள் பதவி நீக்கப்பட்டது. துக்க நிகழ்வில் கட்சி நிர்வாகியை சந்தித்ததற்காக அவரின் பதவியையும் பறிக்கப்பட்டுள்ளது.
தவெகவில் இணைந்ததற்கு காரணங்கள்
நான் தவெகவில் இணைந்ததற்கு காரணங்கள் உண்டு. திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல. ஒன்றாக இணைந்து பயணிக்கிறார்கள். தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்காக தவெகவில் இணைந்துள்ளேன்.
விஜய்க்கு ஓட்டு போடுங்கள்
பள்ளி குழந்தைகள் கூட தங்கள் பெற்றோரிடம் விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என கூறும் நிலை தமிழகத்தில் தற்போது உள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என நான் கெடு விதிக்கவில்லை. நான் பேசிய வீடியோவை மீண்டும் போட்டு பாருங்கள். நான் எந்த கெடுவையும் விதிக்கவில்லை.
10 நாட்களில் பேச்சுவார்த்தை
"10 நாட்களில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். யாரை சேர்க்கலாம், யாரை சேர்க்கக் கூடாது என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்யலாம்" என்றுதான் சொன்னேன். ஆனால் செய்திகளில் கெடு என போட வைத்தது எடப்பாடி பழனிசாமிதான். என்னை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சரியான முறையில் காயை நகர்த்திவிட்டார். இதுதான் உண்மை.
நல்லாட்சி
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி தூய்மை இல்லை என நான் எப்போது சொன்னேன். நல்லாட்சியை நடத்தியதால்தான் எம்ஜிஆர் 3 முறையும் ஜெயலலிதா 5 முறையும் ஜெயித்தனர். ஜெயலலிதா மீது போடப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு வேறு. அவர் தூய்மையானவர். ஒரு வழக்கை எப்படி வேண்டுமானாலும் ஜோடிக்கலாம். அப்படித்தான் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீது வழக்கு ஜோடிக்கப்பட்டது.
தவெகவில் யாரும் அப்படி சொல்லலை
ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என தவெகவில் யாரும் சொல்லவில்லை. இது ஜனநாயக கட்சி. யாருடைய படத்தை வேண்டுமானாலும் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம். நான் படத்தை வைக்காமல் மாற்றிவிட்டால், இன்னிக்கே மாறிட்டியேனு கேட்பாங்க.
அதிமுக கரை வேட்டி
நிமிஷத்திற்கு ஒரு கட்சி மாறிவிட்டு படத்தையும் தூக்கி போட்டுவிட்டார் என என்னை பேசுவீர்களா இல்லையா? நான் அதிமுக கரை வைத்த வேஷ்டி கட்டாததற்கு காரணம், என் மேல் வழக்கு போட்டார்கள். அதனால்தான் நான் கரை வேட்டி கூட கட்டவில்லை. இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications