பாட்டிலுக்கு 10 ரூபானு பாடிட்டு.. 50 ரூபாய் ஏற்றும் விஜய்! தனியாருக்கு டாஸ்மாக்? மதுவிரும்பிகள் ஷாக்
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாதாரண மற்றும் நடுத்தர ரக வெளிநாட்டு மதுபானங்கள், பீர் உள்ளிட்டவற்றின் விலையை ரூ.10 முதல் ரூ.50 வரை உயர்த்துவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் குடிமகன்கள் கலக்கமடைந்துள்ளனர்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போதைப்பொருள் தடுப்பு ஆகிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அவர் கூறியிருந்தார்.

சொன்னது போலவே டாஸ்மாக் விவகாரத்தில் விஜய் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், கல்லூரிகள் பேருந்து நிலையங்களுக்கு 500 மீட்டர் சுற்றளவில் இருக்கும் 717 மது கடைகளை மூட உத்தரவிட்டார்.
விஜய் அரசு
இது பெண்களுடைய பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டுமல்லாமல் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்கக் கூடாது என்ற ஏற்கனவே இருக்கும் விதியை மிகக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மதுவிரும்பிகளை கட்டுப்படுத்தும் வகையில், அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தரும் வகையில், தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை மீண்டும் உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாஸ்மாக்
தமிழகத்தில் தற்போது 4,000-க்கும் அதிகமான டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம் தினமுன் ரூ.150 கோடி முதல் 200 கோடிக்கும் அதிகமான வருவாய் அரசுக்கு கிடைத்து வருகிறது. இதுவே தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விசேஷ தினங்கள் என்றால் இது 400 முதல் 500 கோடியாகக் கூட இருக்கும். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சில வகை மதுபானங்களின் சில்லறை விலையை உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுபான விலை உயர்வு
குறிப்பாக விஸ்கி, பிராண்டி, ரம், வோட்கா போன்ற இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களின் சில பிரிவுகள் மற்றும் பீர் வகைகளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் விஜய் அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் சில கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாக மதுபான உற்பத்தியாளர்கள் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
சில்லறை விலை
மூலப்பொருட்களின் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, பேக்கேஜிங் செலவு உள்ளிட்டவை கடந்த சில மாதங்களில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய சில்லறை விலையில் விற்பனை செய்வது சிரமமாக இருப்பதாகவும் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. இதன் அடிப்படையில்தான் விலையை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
717 டாஸ்மாக் கடைகள்
அதுமட்டுமல்லாமல், இதற்கிடையில், மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதும் விலை உயர்வுக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. வருவாயை அள்ளித் தந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு கிடைக்கும் வருவாயில் ஏறக்குறைய பாதிக்குப் பாதி குறைந்துள்ளதாக அதிகாரிகள் சொல்கின்றனர்.
அந்த வருவாய் இழப்பை ஓரளவு ஈடுகட்டும் வகையிலும் மதுபான விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பார் உரிமங்கள்
மேலும், மதுபான விலை உயர்வு மட்டுமின்றி, பார் உரிமங்களை நீட்டிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், டாஸ்மாக் சில்லறை விற்பனையின் ஒரு பகுதியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2024 பிப்ரவரி 1-ஆம் தேதி டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அப்போது பல்வேறு பிராண்டுகளின் விலையில் ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்வு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications