ஒரு நொடியில் பேரழிவு.. உயிரிழப்பு 100ஐ தாண்டி இருக்கும்.. வயநாட்டில் மக்களை காப்பாற்றியது இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே நேற்றைய தினம் கனமழையால் வயநாட்டில் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. வானிலை எச்சரிக்கை மட்டும் சரியான நேரத்தில் வரவில்லை என்றால் 100+ தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் ஏற்பட்ட மண்சரிவே இந்த விபத்திற்குக் காரணமாக இருந்தது. நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த விபத்து தொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திடுக் தகவல்கள்
இதற்கிடையே இது தொடர்பான விசாரணையில் பல திடுக் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதாவது இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் அபாயம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டதாக அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கனமழை எச்சரிக்கையால் ஏற்கனவே பெரும்பாலான தொழிலாளர்கள் பணியிடத்தை விட்டு வெளியேறியதாகவும் அதுவே பெரிய உயிரிழப்பைத் தடுத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
மீனாட்சி பாலம் அருகே நடைபெற்று வரும் சுரங்கப்பாதை கட்டுமான பகுதியில் நேற்று காலை திடீரென மலைச்சரிவு ஏற்பட்டது. சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு மண், பாறைகள் மற்றும் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் சரிந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மற்றும் அருகிலிருந்த உணவகத்தை புதைத்தன.
உயிரை காப்பாற்றிய வானிலை அலர்ட்
இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி திலீப் மிஸ்ரா கூறுகையில், "வழக்கமாக இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்வார்கள். ஆனால் கனமழை எச்சரிக்கை காரணமாக ஏற்கனவே பல தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். சம்பவம் நடந்தபோது உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களை சேர்ந்த 25 பேர் மட்டுமே முகாமில் இருந்தனர். எல்லாம் நார்மலாகவே இருந்தது. அப்போது திடீரென பெரிய சத்தம் கேட்டது. நான் மீனாட்சி பாலம் பேருந்து நிறுத்தம் அருகே இருந்தேன். சத்தம் கேட்டவுடன் உடனடியாக ஓடிவிட்டேன். சில நொடிகள் தாமதித்திருந்தால் நானும் மண்ணில் சிக்கியிருப்பேன்" என்றார்.
அப்பகுதியில் வசிக்கும் அஷ்ரப் என்பவரின் குடும்பமும் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பியது. அஷ்ரப் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உம்ரா யாத்திரைக்காகச் சவுதி அரேபியா சென்றிருந்த நிலையில், அவரது மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தை மட்டும் வீட்டில் இருந்தனர். மண் சரியத் தொடங்கியதைப் பார்த்த அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியே ஓடியதால் உயிர் தப்பினர்.
உயிர் தப்பினார்
அதேபோல் நிலச்சரிவு நடந்த இடத்திற்கு அருகில் சிறிய சிற்றுண்டி கடை நடத்தி வந்த அப்துரஹ்மான் என்பவரும் இதில் நூலிழையில் உயிர் தப்பினார். வழக்கமாகக் காலை 10 மணிக்கே கடையை திறந்துவிடுவார். நேற்றும் கூட காலையிலேயே கடையை திறந்திருந்தார். இருப்பினும், மண் சரிவு சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவர் வீட்டிற்கு ஒரு வேலைக்காக சென்றிருந்ததால் உயிர் தப்பினார். அவர் திரும்பி வரும்போது மண் சரிந்து கடை முழுவதும் புதைந்தது.
இந்த நிலச்சரிவு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் 900 கண்டி பகுதிக்கு அருகில் ஏற்பட்டது. அங்கு வாகனங்களை நிறுத்தியிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மண் சரிவு
வங்கி வேலைக்காக மேப்பாடி வந்திருந்த ஒரு தம்பதியும் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பினர். அவர்கள் அங்கிருக்கும்போதே மண் சரிந்து வரத் தொடங்கியது. உடனடியாக மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு ஓடிய கணவர், வேகமாக செல்ல தனது குடையை கூட தூக்கி எறிந்தார். சேற்றில் சிக்கி மனைவி ஓட முடியாமல் தவித்தபோது மீண்டும் திரும்பிச் சென்று அவரை இழுத்துக் கொண்டு ஓடினார்.. "உயிர் தப்பினாலும் ஒன்றாக தான்... இறந்தாலும் ஒன்றாக தான்" என்ற எண்ணத்துடன் மனைவியை காப்பாற்ற ஓடியதாக அவர் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications