செங்கோட்டையன் கோபியில் ஊதுவாரா விசில்? 40 வருட கோட்டையில் இன்று வரலாறு படைப்பாரா தளபதியின் தளபதி
சென்னை: செங்கோட்டையன் கோபி தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்தவர்.. ஆனால், இன்று அதே மண்ணில் புதிய சின்னத்தில் அவர் எதிர்கொள்ளும் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத சவால்களைக் கொண்டுள்ளது. வாக்குகள் சிதறுமா அல்லது மீண்டும் அதே ஆதிக்கம் தொடருமா என்கிற கேள்விக்கு இன்று மாலை விடை கிடைத்துவிடும். ஏனென்றால் அதிமுகவின் நீண்டகால அடையாளமாக இருந்தவர், இன்று அதே கட்சிக்கு எதிராக மல்லுக்கட்டும் நிலையில், கோபியின் தீர்ப்பு தமிழக அரசியலில் மிக முக்கியமான திருப்பமாக அமையப்போகிறது.
கொங்கு மண்டலம் என்றாலே அது அதிமுகவின் எஃகு கோட்டை என்பதுதான் கடந்த பல தசாப்தங்களாக நிலவி வரும் அரசியல் எதார்த்தம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக அலை வீசியபோதும், அதிமுகவைக் கைவிடாமல் தற்காத்து நின்றது இந்த கொங்கு பூமிதான்.

செங்கோட்டையன் - கோபிச்செட்டிப்பாளையம்
ஆனால், அதே மண்டலத்தில் பல காலமாக திமுக பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த முறை கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் களம் அனல் பறக்கக் காத்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், அங்கு நிலவும் அதிரடியான மும்முனைப் போட்டி.
1980ம் ஆண்டு முதல் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் முகவரியாகத் திகழ்ந்தவர் கே.ஏ. செங்கோட்டையன். 1989 முதல் இந்தத் தொகுதி செங்கோட்டையனின் அசைக்க முடியாத சாம்ராஜ்யமாகவே இருந்து வந்துள்ளது.
2001-ல் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட ஒரு தேர்தலைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அவரே வெற்றி வாகை சூடினார். கோபி என்றால் செங்கோட்டையன், செங்கோட்டையன் என்றால் கோபி என்ற நிலை மாறி, இப்போது அதே மண்ணில் அவர் விசில் சின்னத்தில் களம் காண்பதுதான் தற்போதைய அரசியல் ட்விஸ்ட்டாகும்.
சாக்கடையில் கல் எறிந்தால்?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கடும் அதிகார மோதலால், அதிமுகவிலிருந்து வெளியேறி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார் செங்கோட்டையன்.
இப்படி மூத்த தலைவர் தவெகவில் இணைந்தது, எடப்பாடிக்கே கொஞ்சம் அதிர்ச்சிதானாம். இந்த தேர்தலில் தவெக வேட்பாளராக செங்கோட்டையன் களம் இறங்கியுள்ள நிலையில், பிரச்சாரக் களத்தில் தனிநபர் விமர்சனங்கள் எல்லை மீறின. செங்கோட்டையனை ஒருமையில் விமர்சித்த எடப்பாடி, அவர் குறித்த ரகசியங்களை வெளியிட்டால் மக்கள் காறித் துப்புவார்கள் எனச் சீறினார்.
இதற்குப் பதிலடியாக, "சாக்கடையில் கல் எறிந்தால் நம் மீதுதான் நாற்றம் அடிக்கும்" என செங்கோட்டையன் கொடுத்த பதிலடி, களத்தை அதிரவைத்தது.
திமுக ஸ்மார்ட் கேம்
இந்த பிளவுதான் தற்போது திமுகவிற்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. கடந்த 26 ஆண்டுகளாக கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற முடியாமல் தவித்து வரும் திமுக, இந்த முறை அதிமுக வாக்குகளின் சிதறலை தனக்கு சாதகமாக்கி கொள்ளத் துடிக்கிறது.
செங்கோட்டையனின் வெளியேற்றத்தால் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்தால், அது நேரடியாக உதயசூரியன் சின்னத்திற்குப் பலம் சேர்க்கும். இருப்பினும், 'சின்னமே முக்கியம்' என்று நினைக்கும் தீவிர இரட்டை இலை விசுவாசிகள் அதிமுக பக்கம் உறுதியாக நின்றால், கோட்டையைத் தக்கவைக்க எடப்பாடி அணிக்கு வாய்ப்பு உண்டு.
விசில் சின்னம் சாதகம்?
இன்னொருபக்கம், செங்கோட்டையனின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் நடிகர் விஜய்யின் ரசிகர் பட்டாளம் என இளைஞர்களின் வாக்குகள் விசில் சின்னத்திற்குச் சாதகமாகத் திரும்பினால், செங்கோட்டையன் மீண்டும் ஒருமுறை தனது பலத்தை நிரூபிப்பார்.
அதிமுக வாக்குகள் முழுமையாகப் பிரியும் பட்சத்தில், இடையில் திமுக எளிதாக முந்திச் செல்லவும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. 26 ஆண்டு கால ஏக்கம் முடிவுக்கு வந்து கோபியில் உதயசூரியன் உதயமாகுமா அல்லது செங்கோட்டையன் தனது கோட்டையைத் தவெக மூலம் மீட்டெடுப்பாரா? ஒரே தொகுதியில் 3 சக்திகள் மோதும் இந்தப் போட்டி, நாளைய அரசியல் சமநிலையையே மாற்றக்கூடியதாகப் பார்க்கப்படுகிறது...!!












Click it and Unblock the Notifications