புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான பொறுப்பு.. செங்கோட்டையனுக்கு என்ன பதவி? விஜய் வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். அதேபோல் கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அமைப்புச் செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், இன்று காலை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த செங்கோட்டையனை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் வாசல் வரை வந்து வரவேற்று அழைத்து சென்றனர். இதன்பின் செங்கோட்டையனுக்கு தவெகவின் துண்டை அணிவித்து விஜய் வரவேற்றார்.

இதனிடையே செங்கோட்டையனுக்கு என்ன பதவி அளிக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக தவெக தரப்பில், மாலை அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் செங்கோட்டையனுக்கு என்ன பதவி என்பதை அறிவித்துள்ளார். அதில், மூத்த அரசியல் தலைவர் செங்கோட்டையன் இன்று முதல் தவெகவில் இணைந்து மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கிறார்.
அண்ணன் செங்கோட்டையனுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 28 பேர் கொண்ட எனது கண்காணிப்பில் இயங்கும் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார். இவர் இக்குழுவை வழிநடத்தி தவெகவின் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க எனக்கு உறுதுணையாக செயல்படுவார்.
கூடுதலாக ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். என்னோடும், பொதுச்செயலாளர் ஆனந்த் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து இந்த மாவட்டங்களில் பணிகளை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக மேற்கு மண்டலத்தின் ஒரு பாதியை செங்கோட்டையன் வசம் விஜய் ஒப்படைத்திருப்பதாக தெரிகிறது.
அதேபோல் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான ஒரு பதவியை செங்கோட்டையனுக்கு விஜய் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது. மேற்கு மண்டலத்தில் தவெக இன்னும் வலுவாக காலூன்றவில்லை என்று பார்க்கப்பட்ட போது, செங்கோட்டையனுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications