தவெக கட்சித் துண்டை போட்டதும் அணிய மறுத்த செங்கோட்டையன்! அதிர்ச்சியான ஆதவ் அர்ஜுனா! ஏன்?
சென்னை: தவெக அலுவலகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஆதவ் அர்ஜுனா அணிவித்த துண்டை செங்கோட்டையன் போட மறுத்து எடுத்துவிட்டதால் பரபரப்பு எழுந்தது. தான் ஏன் துண்டு போடவில்லை என்பது குறித்து ஆதவ்விடம் செங்கோட்டையன் என்ன சொன்னார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் தவெகவில் இன்று இணைந்தார். அப்போது செங்கோட்டையனுக்கு கட்சித் துண்டை விஜய் அணிவித்தார். இதையடுத்து ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் ஆகியோருடன் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, கட்சித் துண்டை வாங்கி செங்கோட்டையன் தோளில் போட்டார்.
உடனே அந்த துண்டை எடுத்த செங்கோட்டையன், "துண்டு போட்டா கிண்டலடிப்பாங்க" என நகைச்சுவையாக தெரிவித்தார். ஆதவ்வுடன் அந்த துண்டை வாங்கிக் கொண்டார். இதனால் சிறிய சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது செங்கோட்டையன் கூறியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலச்சூழல் காரணமாக மூன்று கூறுகளாக அதிமுக பிரிந்தது. எல்லாரும் ஒன்றினைய வேண்டும் என்றுதான் கருத்துகளை வெளிப்படுத்தினோம். ஆகவே இன்றைய சூழலில் நான் சொல்ல விரும்புவது, 'நானென்று ஒருவன் நினைத்தான், ஆண்டவன் தானென்று பார்த்துக் கொள்வார்'.
முதலில் என்னுடைய பொறுப்புகளை எடுத்தார்கள். தேவர் ஜெயந்திக்கு சென்று திரும்பியபிறகு என்னுடைய உறுப்பினர் பதவியை கூட எடுத்துக் கொண்டனர். 50 ஆண்டுகாலம் இந்த அரசியல் பயணத்தில் நான் சந்தித்த ஏற்றத் தாழ்வுகளுக்கு பரிசுதான் இது. மகேஷ் என்பவரின் தந்தையின் இறப்புக்கு நான் சென்றதால் அவருடைய அடிப்படை உறுப்பினர் பதவியையும் பறித்துள்ளனர்.
இதனை கருத்திக் கொண்டுதான் தெளிவான முடிவு எடுத்து நேற்று என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். இங்கு ஏன் இணையவேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழக்கூடும். இன்று திமுக வேறு, அதிமுக வேறு என்பதல்ல. இரண்டும் ஒன்றாக இணைந்துதான் பயணத்தை மேற்கொண்டு வருகின்றன என்பதை நாடறியும்.
ஏனெனில் தேர்தல் களத்தில் இருக்கின்ற போது ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனு, அதன்பிறகு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறோம் என சொன்னதோடு சரி. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் தற்போது எப்படி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியும். என்னுடைய பயணத்தை பொறுத்தவரையில் ஒரு தூய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர்வதற்கு தவெக தான் சரி. இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கி விஜய் மக்கள் மனங்களில் இடம்பெற்றுள்ளார். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பிள்ளைகளை கேட்டால், இம்முறை விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்கள் பெற்றோரை வலியுறுத்துவர்.
தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். ஒரு தூய்மையான ஆட்சியை அமைக்க இவர் ஏன் வரக்கூடாது.எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதுபோல் தமிழகத்திலும் வரும் 2026ல் புதிய புரட்சி வரும் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications