“ஐன.23க்கு அப்புறம் நடக்கப்போறத பாருங்க”.. மோடி வரும் நாளா? ‘சஸ்பென்ஸ்’ வைத்த செங்கோட்டையன்!
சென்னை: ஐனவரி 23 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என தவெக உயர்மட்டக் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நாளை குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் களம் தீப்பற்றி வருகிறது. அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடு பேச்சுகளில் மும்முரம் காட்டி வருகின்றன. கூட்டணியை இறுதி செய்வதில் முன்னணி கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி 23 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் என்.டி.ஏ கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற பாஜக தயாராகி வருகிறது. அதற்குள்ளாக கூட்டணி வடிவத்தை இறுதி செய்ய பேச்சுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஐனவரி 23 ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த கட்சிகள் தவெகவுடன் கைகோர்க்கிறார்கள் என்பது தெரிந்துவிடும் என முன்னாள் அமைச்சரும் தவெக உயர்மட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் நாளை குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியுள்ளது அரசியல் களத்தில் விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக உயர்மட்டக் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநில மக்கள் கூட, விஜய்யைப் போல ஒரு தலைவர் தங்கள் மாநிலத்திற்கு இல்லையே என ஏங்குகிறார்கள். ஒரு திரைப்படத்திற்கு 250 கோடி ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், நான்கு படங்களில் நடித்தால் 1000 கோடி ரூபாய் எளிதாகக் கிடைக்கும்.
ஆனால், அந்தப் பெரும் பணம் தமக்குத் தேவையில்லை எனத் துறந்துவிட்டு, மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற ஒரே உயரிய நோக்கத்திற்காக அரசியலுக்கு வந்த ஒரே தலைவர் விஜய் தான். திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும்போதே அதனை விடுத்து மக்கள் பணிக்காக அவர் வந்திருக்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "பொருளாதாரத்தில் சிறந்த ஆளுமையும் ஆற்றலும் மிக்கவர் விஜய். அவர் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார். எங்கள் கட்சியில் வேட்பாளர்களைத் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் படித்த இளைஞர்கள் அதிகளவில் இணைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பில்லை என்றும், அவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கத் தேவையில்லை என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேசிய செங்கோட்டையன், "ஜனவரி 23-ஆம் தேதிக்குப் பிறகு தவெகவுடன் எந்தெந்தக் கட்சிகள் கைகோர்க்கின்றன என்பது தெளிவாகத் தெரியும்" என்று கூறியுள்ளார்.
ஜனவரி 23 ஆம் தேதிதான் பிரதமர் நரேந்திர மோடி, மதுராந்தகத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்றைய நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனது முழு வடிவத்தைப் பெற்று, கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையேற்றப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. அந்த நாளைக் குறிப்பிட்டு, தவெக தலைவர் செங்கோட்டையன் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications