செங்கோட்டையன் கையில் ‘பஞ்ச தந்திரம்’.. விஜய்கிட்ட வைத்த 5 டிமாண்ட்! எடப்பாடி தான் டார்கெட்டாமே?
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துள்ளார். முன்னதாக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அவர் தவெகவில் இணைந்தார். அப்போது முக்கியமான ஐந்து கோரிக்கைகளை விஜயிடம் செங்கோட்டையன் முன் வைத்ததாகவும், விஜய் அதற்கு ஒப்புக்கொண்ட பிறகு கட்சியில் சேர்ந்ததாக சொல்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். கொங்கு மண்டலத்தில் அதிகாரம், எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க நானே வேட்பாளரை தேர்வு செய்வேன் உள்ளிட்ட கோரிக்கைகளை செங்கோட்டையன் சொன்னதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைய முன்பாக நடிகர் விஜயை நேரில் சந்தித்து முக்கியமான நிபந்தனைகளை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சில நேரங்களிலேயே, தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையனை பலமுறை தொடர்பு கொண்டு கட்சியில் இணைய அழைத்துள்ளார். அதற்கு செங்கோட்டையன், "விஜயை நேரில் சந்தித்து பேச வேண்டும், என் சில நிபந்தனைகளை அவர் ஏற்றால் மட்டுமே தவெகவில் சேர முடியும்" என்று கூறியதாக தெரிகிறது.

செங்கோட்டையன் தவெக
அதன்படி, ஆதவ் அர்ஜுனா இருவருக்கும் சந்திப்பை ஏற்பாடு செய்தார். இதனைத் தொடர்ந்து, தனது எம்எல்ஏ பதவியையும் செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். பின்னர் சென்னையில் விஜயை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் பொதுவான அரசியல் நிலைமைகள் குறித்து பேசியுள்ளார். அதன் பிறகு தான், தவெகவில் இணையத் தேவையான தன் கோரிக்கைகளை விஜயிடம் வெளிப்படையாக முன்வைத்ததாக கூறப்படுகிறது. செங்கோட்டையன் முன்வைத்த முக்கிய கோரிக்கை, கொங்கு மண்டலத்தை முழுமையாக தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான்.
விஜய் சந்திப்பு
கொங்கு மண்டலத்தில் 60க்கும் மேற்பட்ட தொகுதிகள் உள்ள நிலையில், அங்கு தற்போது அ.தி.மு.க., தான் அதிக தாக்கத்துடன் உள்ளது. அதனை உடைத்து தவெகவை எழுச்சி பெறச் செய்யும் திறன் தன்னிடம் இருப்பதாகவும், அந்தப் பகுதிக்கான முழு ஒருங்கிணைப்புப் பொறுப்பை வழங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். அதோடு, கொங்கு மண்டலத்தில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் விஷயத்தில் தனது கருத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் சொன்னதாக சொல்லப்படுகிறது.
கொங்கு மண்டல கட்டுப்பாடு
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் பெரும்பான்மையிலும் தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதும் அவரது நிபந்தனைகளில் ஒன்று. இது திமுக - அதிமுக. இரண்டுக்கும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என அவர் உறுதிய்ளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2026 ஜனவரியில் ஈரோடு அல்லது கோபியில் விஜய் பங்கேற்கும் ஒரு மிகப்பெரிய பொது மாநாட்டை நடத்த வேண்டும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளுகு விஜய் 'அனுமதி' வழங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
2026 தேர்தல் திட்டம்
அந்த மாநாடு, தவெகவின் கொங்கு மண்டல வலிமையை வெளிப்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். அதேபோல், சேலம் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியில் தவெக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தானே தேர்வுசெய்ய வேண்டும் என்றும், பழனிசாமியை அடுத்த தேர்தலில் தோற்கடிப்பது தான் முக்கிய இலக்கு என்றும் செங்கோட்டையன் கூறியதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜயை நேரில் சந்தித்தபின் இந்த நிபந்தனைகள் அனைத்தும் முன்வைக்கப்பட்டதை த.வெ.க., வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் தான் த.வெ.க.,வில் இணைந்துள்ளர் என்கின்றனர் கொங்கு மண்டல தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications